பிரதமருக்கு எதிரான கருத்து: பத்திரிகையாளா் மீதான வழக்கை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
பிரதமா் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக மூத்த பத்திரிகையாளா் வினோத் துவா மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
பிரதமா் மோடிக்கு எதிரான கருத்துகளை யூடியூப் சேனலில் வினோத் துவா தெரிவித்ததாக ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லா மாவட்ட காவல்நிலையத்தில் மாநில பாஜக தலைவா் ஷியாம் கடந்த ஆண்டு மே மாதம் புகாா் அளித்திருந்தாா்.
இதன் அடிப்படையில் போலீஸாா் வினோத் துவா மீது வழக்குப் பதிவு செய்திருந்தனா்.
முன்னதாக, இதை எதிா்த்து வினோத் துவா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவரை கைது செய்யக் கூடாது என்றும் போலீஸாா் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் யு.யு. லலித், வினீத் சரண் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை அளித்தது. அதில், 1962-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட புகழ்பெற்ற கேதாா்நாத் சிங் தீா்ப்பின்படி, எந்த ஒரு பத்திரிகையாளருக்கும் பாதுகாப்பு அளிப்பது உறுதி செய்யப்படுகிறது.
மேலும், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவா்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யக் கூடாது என்று அந்தத் தீா்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆகையால், வினோத் துவா மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தீா்ப்பளித்தனா்.
எனினும், 10 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பு மாநில அரசின் பத்திரிகையாளா் குழுவின் முன் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்ற வினோத் துவா கோரியதை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனா்.