கொரோனாத் தடுப்புத் திட்டம் தயாரிக்க சர்வகட்சி மாநாட்டை உடனே கூட்டுங்கள்! – அரசிடம் சஜித் வலியுறுத்து.
இலங்கையில் சர்வ கட்சி மாநாடொன்றை உடனடியாகக் கூட்டி, கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
சர்வ கட்சி மாநாடொன்றைக் கூட்டுவதற்கு அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் அறிக்கையொன்றின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளார்.
நாடு இரண்டு வருட காலமாக முகங்கொடுத்துள்ள அனர்த்தத்துக்குத் தன்னிச்சையான தீர்மானங்கள் மேற்கொள்வதைவிடக் கூட்டு முயற்சியொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட ஏனைய நாடுகள் மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை வகுத்திருந்தாலும், இலங்கையில் அவ்வாறான திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான அனர்த்த நிலையில் அரசியல் இலாபங்களுக்கு அமைய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படக் கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.