தமிழருக்கு அரசியல் தீர்வை சஜித்தே பெற்றுத் தருவார் : கணேஸ்வரன் வேலாயுதம்
“கட்சி வேறுபாடுகளை மறந்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க வேண்டிய கட்டாயமான தருணத்தில் நாங்கள் இருக்கின்றோம். ஏனெனில் அவர்தான் எமக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவார்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார்.
தென்மராட்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாங்கள் விடுதலைப் போராட்டம் செய்திருக்கிறோம். ஆயுதப் போராட்டம் நடத்தியிருக்கின்றோம். வெற்றி பெற முடியாத பாதையில் இன்னும் பயணிக்க வேண்டும் என்று கூறுவது அர்த்தமில்லாதது. நாங்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாயின் கல்வி பொருளாதார ரீதியில் முன்செல்ல வேண்டும். சர்வதேச நாடுகள் உதவும் என்று கூறுகிறார்கள். ஒரு பெரும்பான்மையை எதிர்த்து ஒரு சிறுபான்மை சமூகத்திற்காக சர்வதேசம் சமூகம் ஒத்துழைக்கும் என்பது நம்ப முடியாத காரியமாகும். எங்கள் நிலப்பரப்பில் எண்ணெய் வளம், தங்கம் இருக்குமாயின் சர்வதேச சமூகம் உதவ முன்வரும். ஆனால், எங்களுடைய நிலப் பரப்பில் அப்படியான வளங்கள் எவையும் இல்லை. பொருளாதார ரீதியாக முன்னுக்கு வருவோமாயின் எமது பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்ள முடியும் எனக் கருதுகிறேன்.
சஜித் பிரேமதாஸ அரசியல் அனுபவமிக்கவர். தமிழ் மக்களின் துன்ப துயரங்களை நன்கறிந்தவர். அவருடைய அணுகுமுறைகள், செயற்பாடுகள் எல்லாம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புமிக்கதாக உள்ளன. கட்சி வேறுபாடுகளை மறந்து அவரை ஆதரிக்க வேண்டிய கட்டாயமான தருணத்தில் நாங்கள் இருக்கின்றோம். ஏனெனில் அவர்தான் எமக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவார்” – என்றார்.
Comments are closed.