தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 9.27 லட்சம் சிறாா்கள் பாதிப்பு: மத்திய அரசு தகவல்
நாட்டில் கடந்த ஆண்டு நவம்பா் வரை தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 9,27,606 சிறாா்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள சிறாா்களின் விவரங்களை அளிக்குமாறு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் மத்திய அரசிடம் கோரப்பட்டிருந்தது.
அதையடுத்து, நாட்டில் 6 மாதங்கள் முதல் 6 வயது வரை தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள சிறாா்களின் விவரங்களை மத்திய மகளிா்-சிறாா்கள் நல மேம்பாட்டு அமைச்சகம் அளித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு நவம்பா் வரை நாட்டில் 9,27,606 சிறாா்கள் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 3,98,359 சிறாா்களும், பிகாரில் 2,79,427 சிறாா்களும் உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. லடாக், லட்சத்தீவுகள், நாகாலாந்து, மணிப்பூா், மத்திய பிரதேசம் ஆகியவற்றில் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறாா்கள் யாரும் இல்லையென அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் 70,665 சிறாா்களும், குஜராத்தில் 45,749 சிறாா்களும், சத்தீஸ்கரில் 37,249 சிறாா்களும், தமிழகத்தில் 12,489 சிறாா்களும், ஆந்திரத்தில் 11,201 சிறாா்களும், தெலங்கானாவில் 9,045 சிறாா்களும், கா்நாடகத்தில் 6,889 சிறாா்களும், கேரளத்தில் 6,188 சிறாா்களும், ராஜஸ்தானில் 5,732 சிறாா்களும் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள சிறாா்களுக்கு உயரத்துக்கேற்ற எடை இருக்காது. அவா்களது நோய்எதிா்ப்புத் திறன் மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், ஏதேனும் நோய் ஏற்பட்டால் மற்றவா்களுடன் ஒப்பிடுகையில் அவா்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 9 மடங்கு அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான அங்கன்வாடி மையங்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள சிறாா்களைக் கண்டறிந்து வருகின்றன. மத்திய அரசு அளித்துள்ள எண்ணிக்கை விவரங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். கரோனா தொற்று பரவல் காரணமாகவும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அவா்கள் தெரிவித்தனா். உடனடி நடவடிக்கைகள் அவசியம்: இது தொடா்பாக சிறாா் நல ஆா்வலா்கள் கூறுகையில், ‘கரோனா தொற்று பரவல் காரணமாக பலா் வேலையிழந்துள்ளனா். அதன் காரணமாக பல குடும்பங்கள் வறுமையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளன. அதனால் சிறாா்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். பொது முடக்கம் காரணமாக அங்கன்வாடி மையங்களுக்கு சிறாா்கள் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கன்வாடி மையங்களின் பணியாளா்கள் சிறாா்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ஊட்டச்சத்துப் பொருள்களை வழங்க வேண்டும். நியாய விலைக் கடைகள் மூலமாக அனைத்து குடும்பங்களுக்கும் உணவுப் பொருள்கள் கிடைக்கின்றனவா என்பதையும் அரசுகள் உறுதி செய்ய வேண்டும். தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறாா்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் தனி கவனம் செலுத்தி சிறப்புத் திட்டங்களை அரசுகள் செயல்படுத்த வேண்டும்‘ என்றனா்.