பட்டப்பகலில் வீடு உடைத்து கொள்ளையிட்ட 2 பேர் கைது. திருடிய பொருட்களும் மீட்பு.
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் வீடு உடைத்து பெறுமதி வாய்ந்த பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்கள் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நகரப் பகுதியில் கச்சேரி நலலூர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் பட்டப்பகலில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது. கடந்த ஞாயிற்றுகிழமை வீட்டில் உள்ளவர்கள் மருத்துவமனைக்குச் சென்ற சமயம் பார்த்து உள்நுழைந்த திருடர்கள் வீட்டை உடைத்து 2 மடிக்கணனிகள், 2 பெறுமதி வாய்ந்த தொலைபேசிகள், 2 சைக்கிள்கள் என மேலும் பல பொருட்களைத் திருடிச் சென்றனர்.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த விசாரணையில் இந்தத் திருட்டுடன் தொடர்புபட்ட இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் திருடப்படட அனைத்துப் பொருட்களும் குற்றத் தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டன.
கைதுசெய்யப்பட்ட நபர்கள் யாழ்ப்பாணம், டேவிட் வீதி மற்றும் சாவகச்சேரியைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கைது நடவடிக்கை யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.