நுகர்வோர் சட்டத்தை லிட்ரோ நிறுவனம் மீறியிருந்தால் நிச்சயம் வழக்குத் தாக்கல் அமைச்சர் பந்துல உறுதி.
நுகர்வோர் சட்டத்துக்கு எதிரான வகையில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் செயற்பட்டிருந்தால் அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நிதி முகாமைத்துவ பொறுப்பு திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. கபீர் ஹாசிம் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்
கபீர் ஹாசீம் எம்.பி. உரையாற்றும்போது, “நுகர்வோர் அதிகாரசபையின் அனுமதியில்லாமல் லிட்ரோ நிறுவனம் 18 லீட்டர் கேஸ் சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகித்து நுகர்வோருக்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அதிகார சபையின் தலைவர் தெரிவித்தும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றது. 18 லீற்றர் கேஸ் சிலிண்டரின் நிறை 9 கிலோவாகும் . இதன் மூலம் விலை அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையின் சட்டத்துக்கு அமைய இதனைச் செய்ய முடியாது.
அத்துடன் இந்தவகையான சிலிண்டர் கடந்த இரண்டு மாதங்களாக சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆனால், அரசோ – சம்பந்தப்பட்ட அமைச்சரோ இந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதன்போது பதிலளித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, “இலங்கையில் கேஸ் சந்தை தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்காக 5 பேர் கொண்ட அமைச்சரவை உப குழுவொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த உப குழுவின் தீர்மானத்துக்கமைய கேஸ் சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதன் பின்னர் தற்போது சந்தையில் இருக்கும் 18 லீற்றர் அடங்கிய செல்கேஸை சந்தையில் இருந்து அகற்றுவது தொடர்பில் தீர்மானிப்போம்.
அத்துடன் நுகர்வோர் அதிகார சபை சட்டத்துக்கு எதிராக எந்த நிறுவனம் செயற்பட்டாலும் அதற்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அந்தவகையில், லிட்ராே கேஸ் நிறுவனம் நுகர்வோர் அதிகார சபையின் சட்டத்துக்கு எதிராக செயற்பட்டிருந்தால், அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடுக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கின்றேன்” – என்றார்.