குடாநாட்டில் கொரோனா தாண்டவம்; மக்களே மிக அவதானமாக இருங்கள் மாவட்ட அரச அதிபர் மகேசன் எச்சரிக்கை.
“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தட்டைப்பிது கொரோனாத் தொற்று குறைந்த நிலைமை இல்லாது அதிகரித்த நிலைமையே காணப்படுகின்றது. எனவே, பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும்.”
இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மொத்தமாக 4 ஆயிரத்து 122 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 53 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் ஐந்து கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தன. அதில் மூன்று கிராம அலுவலர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
நல்லூர் மற்றும் உடுவில் பிரதேச பிரிவுகளில் இரு கிராம சேவகர் பிரிவுகள் மாத்திரம் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுக் காணப்படுகின்றன.
யாழில் 2 ஆயிரத்து 42 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 712 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தற்போது சற்று கொரோனா நிலைமை அதிகரித்துச் செல்லும் நிலைமை காணப்படுகின்றதே தவிர குறைந்ததாக இல்லை. எனவே, பொதுமக்கள் மிகவும் அவதானமாக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும்.
அதேநேரத்தில் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா உணவுப் பொதிகள் வழங்கப்படுகின்றன.
இவ்வருடம் 7 ஆயிரத்து 588 குடும்பங்களுக்கும், கடந்த வருடம் 3 ஆயிரத்து 526 பேருக்குமாக மொத்தம் 11 ஆயிரத்து 114 பேருக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. 111 மில்லியன் பெறுமதியான உணவுப்பொதி வழங்கப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் 5 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவு சமுர்த்தி பெறும் குடும்பங்கள், வறிய குடும்பங்களுக்கான கொடுப்பனவாக அரசால் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. யாழில் தற்போது வரை 65 ஆயிரத்து 120 குடும்பங்களுக்குக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தவர்கள், சிறுநீரகப் பாதிப்புள்ளவர்களுக்கு அடுத்தகட்டமாக இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. வருமானம் குறைந்து இருக்கும் குடும்பங்களுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
யாழ். மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய பொதுமக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வீடு வீடாகச் சென்று விற்பனை செய்வதற்குரிய அனுமதியை சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு வழங்கி இருக்கின்றோம்.
தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பொதுமக்கள் தமக்குத் தேவையான உணவு வகைகளை வீடுகளில் இருந்தவாறே பெற்றுக்கொள்ள முடியும்.
அதேநேரத்தில் உணவு வகைகள், மீன் மரக்கறி போன்றவை நடமாடும் விற்பனை நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்க கூடியதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் விலை அதிகரித்தல், தரமற்ற பொருள் விற்பனை தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து கடந்த ஒரு வார காலமாக பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு பிரதேசமாக சென்று நிலைமைகளைக் களப் பரிசோதனை செய்து வருகின்றார்கள். சட்டமீறலுக்கு உட்பட்ட வியாபாரிகள் எச்சரிக்கை செய்யப்படுவதோடு சிலருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கையும் எடுத்திருக்கிறார்கள்.
குறிப்பாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிவாயு மற்றும் இதர உணவுப் பொருட்கள், ஏனைய பொருட்கள், மரக்கறி போன்றவற்றில் விலை அதிகரிப்பு அவதானத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தற்போது களப் பரிசோதனை மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். சில சட்டமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – என்றார்.