கன்னியாகுமரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பிரம்பால் அடித்து துன்புறுத்திய போலி சாமியார்
கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவர் தனது வீட்டில் அய்யா வழிக் கோவிலுக்கு கிளை அமைத்து அருள் வாக்கு கூறி வந்தார். மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பிரம்பால் அடித்து பேய் ஓட்டும் செயலிலும் துரைராஜ் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், அந்த கோயிலில் இளம் பெண் ஒருவர் சங்கிலியில் கட்டப்பட்ட நிலையில் உடல் முழுவதும் பிரம்பால் அடிக்கப்பட்ட காயங்களுடன் உருண்டு புரளுவது போன்ற வீடியோ காட்சி ஒன்று கடந்த வியாழக்கிழமை சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோ குறித்து தகவல் அறிந்த குளச்சல் துணைக் காவல் கண்காணிப்பாளர் கணேசன் போலீசாருடன் கோயிலுக்குச் சென்று விசாரணை நடத்தினார். அங்கு ஒரு இளம் பெண் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உடலில் காயங்களுடன் இருப்பதை கண்டு அந்த கோயில் சாமியாரான துரைராஜிடம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் சேவிளை பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான வினோ என்பவரின் மனைவி அஜிதா என்பது தெரியவந்தது. எம்.எஸ்.சி, பி.எட் பட்டதாரி பெண்ணான இவருக்கு கடந்த 15-நாட்களுக்கு முன் மனநலப் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவருக்கு பேய் பிடித்திருக்கலாம் என எண்ணிய பெற்றோர் மற்றும் கணவர் வினோ, அந்த பெண்ணின் கை கால்களை கட்டி போலி சாமியார் துரைராஜ் வீட்டில் உள்ள கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அந்த பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதாகவும் அதை ஓட்டும் வரை குடும்பத்தோடு கோயிலில் தங்குமாறும் துரைராஜ் கூறியுள்ளார்.
பிறகு அந்த பெண்ணை சங்கிலியால் கட்டிப்போட்டு பேய் ஓட்டுவதாகக் கூறி தினமும் பிரம்பால் அடித்து சித்ரவதை செய்ததும், அதில் அந்த பெண்ணுக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட போலீசார் பெண்ணின் கணவரான ராணுவ வீரர் வினோவை எச்சரித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் கேட்டுக்கொண்டதால், கணவர் வினோவை விசாரணைக்கு அழைத்துச் செல்லாமல் எச்சரித்து மனைவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே இந்த போலி சாமியார் மீது குளச்சல் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலைவையில் உள்ளதாக கூறும் போலீசார் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறிச் சென்றனர்.
இந்த நிலையில் துரைராஜ் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். மனநோயாளிகளுக்கு சிறந்த நவீன மருத்துவ முறைகள் உள்ள நிலையில், ஒருசிலர் பேய் பிடித்திருப்பதாக கூறி இது போன்ற போலி சாமியார்களிடம் சிக்கி கொள்கின்றனர்.