பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர்களில் ரணிலைத் தவிர மாற்றுத் தெரிவுகள் இல்லை – ஆசு மாரசிங்க தெரிவிப்பு
“ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் இரு வருடங்களில் அதன் புதிய தலைவரை அறிவிக்கும். இளம் தலைவர்களிடம் பொறுப்பைக் கையளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ரணில் விக்கிரமசிங்கவும் இருக்கின்றார். எனினும், தற்போதைய நெருக்கடி நிலையில் நாட்டை சரிவர நிர்வகிக்கக்கூடிய சிறந்த பொருளாதார இலக்கு அவரிடம் மாத்திரமே காணப்படுகின்றது. எனவே, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அரசு அமைக்கும் பட்சத்தில், பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர்களில் ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர மாற்றுத் தெரிவுகள் இல்லை.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தற்போதுள்ள ஆளுந்தரப்புடன் இணைந்து அரசு அமைக்க வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் எமக்கில்லை. ஐக்கிய தேசியக் கட்சி அரசொன்றை அமைப்பதே எமது ஒரே எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இது குறித்து எமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தெளிவுபடுத்தலை வழங்கியிருந்தார். எனவே, நாம் அரசுடன் டீல் ஒன்றைச் செய்திருப்பதாக எவரேனும் கூறுவார்களாயின், உண்மையில் அவ்வாறு கூறுபவர்கள்தான் டீலைச் செய்திருக்கின்றார்கள்.
ரணில் விக்கிரமசிங்க சிங்கள மொழியில் பாடசாலைக் கல்வியைப் பெற்று, பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு, நாட்டின் இலவசக் கல்வியின் ஊடாகவே தனது கல்வியைப் பூர்த்திசெய்துகொண்ட ஒருவராவார். ஆனால், சில தலைவர்கள் ‘நான் தான் இந்த நாட்டிலேயே மிகவும் கற்றறிந்தவன்’ என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் குறைந்த பட்சம் ஜி.சீ.ஈ. சாதாரணதரப் பரீட்சையிலேனும் சித்தியடைந்திருப்பார்களா என்று தெரியவில்லை.
தாம் ஆட்சியமைத்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 25 ஆயிரம் ரூபாவை வழங்குவதாக சஜித் பிரேமதாஸ கூறுகின்றார். சாதாரணதரப் பரீட்சையில்கூட சித்தியடையாததால் அவருக்குத் தனியாகக் கணித பாடத்தைக் கற்பிக்க வேண்டியிருக்கின்றது. ஒரு வாக்குறுதியை வழங்குவதற்கு முன்பாக அது நடைமுறையில் சாத்தியமானதா என்றுகூட சிந்திக்கமாட்டார்களா என்ற கேள்வியே எழுகின்றது. சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தேர்தலின்போது கூறிய நடைமுறைச் சாத்தியமற்ற கருத்துக்களையே தற்போதும் கூறி வருகின்றார்.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையை சீர்செய்வதற்கு முதலில் ஒவ்வொரு குடும்பத்தினதும் பொருளாதாரத்தை சரிசெய்வதற்கான செயற்திட்டமொன்று தேவைப்படுகினறது. அதனை முன்நிறுத்தியே ஐக்கிய தேசியக் கட்சி செயற்பட்டு வருகின்றது. அதேபோன்று நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியிருப்பதுடன், அதற்கான நிதியையும் கடந்த காலத்தில் திரட்டிக் காண்பித்திருக்கின்றோம்.
அதேபோன்று அரசு விசேட ஜனாதிபதி செயலணிகளை உருவாக்கி, அவற்றின் உறுப்பினர்களாக இராணுவத்தினரை நியமித்து ஒருபுறம் மக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்திவரும் அதேவேளை, மறுபுறத்தில் தமது தொழிற்சங்கங்களின் ஊடாக எதிரணியினர் மீது தாக்குதல்களையும் நடத்தி வருகின்றது. அத்தகைய சில தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதுடன், அதுபற்றி உடனடியாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவதானம் செலுத்தவேண்டும்” – என்றார்.
Comments are closed.