கொரோனா காலம்: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கடந்த காலங்களை விட கொரோனா காலத்தில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் 32 மேல்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்க பள்ளி உள்பட மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 14ஆம் தேதியில் இருந்து மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேறி அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர்.
2019-20 கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் ஒன்று முதல் 11ம் வகுப்பு வரை புதிதாக சேர்ந்த மாணவர்கள் 18,605 பேர். இவற்றில் தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேறி 6,533 பேர் மாநகராட்சி பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
2020-21 கல்வியாண்டில் இந்த எண்ணிக்கை 33 விழுக்காடு அதிகரித்து 27,843 பேர் மாநகராட்சி பள்ளிகளில் இணைந்துள்ளனர். இந்த கால கட்டத்தில் பிற பள்ளிகளில் இருந்து மாநகராட்சி பள்ளிக்கு இடம்பெயர்ந்து வந்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. அதாவது 14763 பேர் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து விலகி மாநகராட்சி பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
தற்போதைய கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கிய ஒரே வாரத்தில் 6,897 பேர் மாநகராட்சி பள்ளிகளில் புதிதாக சேர்ந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த கல்வி ஆண்டை விட அதிகமானோர் சேர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.. கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட வருவாய் இழப்பால் பல நடுத்தர குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதே போல் முன்பை விட தற்போது தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க ஒரு காரணம் என்கிறார்கள் அதிகாரிகள்.