மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்றல்: அரசமைப்பை மீறவில்லை என்கிறார் சுகாதார அமைச்சர் பவித்ரா.
“மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்கும் விடயத்தில் நாம் எந்தவொரு இடத்திலும் அரசமைப்பை மீறவேயில்லை.”
இவ்வாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட 4 மருத்துவமனைகள் உட்பட 9 மருத்துவமனைகளை மத்திய அரசு தனக்குரியதாக்குவதற்கு அமைச்சரவை அனுமதித்துள்ளது. இந்தச் செயற்பாடு அரசமைப்பை மீறிய செயல் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தநிலையில் இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்றுள்ளது. குறித்த மருத்துவமனைகளை அபிவிருத்தி செய்வதே அரசின் நோக்கம்.
நாட்டின் தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் மத்திய அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே மாகாண மருத்துவமனைகளைப் பொறுப்பேற்றது.
ஆனால், மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசுக்கு வழங்க முடியாது என்று தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட எதிரணியினர் சிறுபிள்ளைத்தனமாகக் கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
இது வெட்கக்கேடானது. முதலில் அவர்கள் நாட்டின் தற்போதைய சட்டதிட்டங்களைப் படித்துவிட்டு வாதங்களை முன்வைக்க வேண்டும்.
மாகாண சபை நிர்வாகத்தை நடத்த முடியாமல் ஆட்சிக்காலத்தை வீணாக்கிய வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் தற்போது மத்திய அரசை நோக்கி கைவிரல் நீட்டுகின்றனர்” – என்றார்.