தடுப்பூசிக்கு கட்டாயப்படுத்துவது அடிப்படை உரிமை மீறல்: மேகாலயா நீதிமன்றம்!
ஒருவரை தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்துவது என்பது அடிப்படைஉரிமையை மீறுவதாகும் என மேகாலய உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாட்டின் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்துவதை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் 2 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹரியானா மாநில அரசு வணிகர்கள், கடைக்காரர்கள், டாக்சி ஓட்டுநர்கள் போன்றோர் தங்களது தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பாக கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவித்தது. இந்த விவகாரம் மேகாலய உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில், “ கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி கட்டாயம் என்றும் தற்போதைய தேவையாக தடுப்பூசி உள்ளது ”என்றும் தெரிவித்த தலைமை நீதிபதி பிஸ்வநாத் சோமாடர் மற்றும் நீதிபதி எச்.எஸ்.தாங்கீவ் அடங்கிய அமர்வு, அதேவேளையில் தடுப்பூசி செலுத்தும்படி கட்டாயப்படுத்தும் அடிப்படை உரிமையை மீறுவது என்று கருத்து தெரிவித்தது.
கட்டாயப்படுத்தியோ நிர்பந்தித்தோ தடுப்பூசி போட்டுக்கொள்ள செய்வது என்பது அதனுடன் தொடர்புடைய அடிப்படை நலத்தை பாழ்படுத்துவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசியலமைப்பின் 19 (1) வது பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ள வாழ்வாதாரத்திற்கான அடிப்படை உரிமையை மீறும் எந்தவொரு நடவடிக்கையையும் மாநில அரசால் எடுக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
தடுப்பூசியின் நன்மை, தீமை குறித்து பரப்புவதும் உணர்த்துவம் மாநில அரசின் பொறுப்பு என தெரிவித்த நீதிமன்றம், தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் சுமை மாநில அரசுக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டது. தடுப்பூசி தொடர்பாக தவறான செய்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேபோல், கடைகள், நிறுவனங்கள், டாக்சி உள்ளிட்டவை தங்களது ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள் என்றால் ‘தடுப்பூசி செலுத்திக்கொண்டோம்’ என்ற பதாகையை வைக்க வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் ‘தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை’ என்ற பதாகையை பொதுமக்கள்பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.