சகல அரசியல் கைதிகளையும் ஏன் விடுதலைசெய்ய முடியாது? ஜனாதிபதியிடம் அனந்தி சசிதரன் கேள்வி.
“விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் விவாதத்தால் 16 அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும் என்றால் ஏன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவாலும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவாலும் ஒட்டுமொத்த அரசியல் கைதிகளையும் விடுவிக்க முடியவில்லை?”
இவ்வாறு ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் அமைச்சருமான அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பினார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நீண்டகாலமாக சிறைகளில் இருந்த அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது மகிழ்ச்சியான விடயமாகும்.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வருடக்கணக்கில் போராட்டங்கள் நடைபெற்று நிலையிலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டது உண்மையில் மகிழ்ச்சியான விடயமே. இவை தவிர மிகுதியாக உள்ள அரசியல் கைதிகளும் எந்தவித பாரபட்சமும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும். சிங்கள, முஸ்லிம்கள் கூட ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு உதவினர் என்ற குற்றச்சாட்டில் இன்றும் பலர் அரசியல் கைதிகளாக உள்ளனர். அவர்களையும் விடுவிக்க வேண்டும் .
ஒரு சாதாரண விளையாட்டுத்துறை அமைச்சரால் விவாதம் ஒன்றை நடத்தி 16 அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும் என்றால் ஏன் ஜனாதிபதியாலும் பிரதமராலும் ஒட்டுமொத்த அரசியல் கைதிகளையும் விடுவிக்க முடியவில்லை என்ற கேள்வி எமக்குள் எழுகின்றது.
இரகசியத் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு பெயர் வெளியிடப்படாமல் இருந்தவர்கள் மற்றும் சரணடைந்து காணாமல்போனவர்கள் பற்றிய விவரங்களையும் அரசு வெளிப்படுத்த வேண்டும்” – என்றார்.