கொரோனாவால் வருமான இழப்பு – தனியார் மோகத்தைவிடுத்து அரசு பள்ளிக்கு படையெடுக்கும் பெற்றோர்கள்
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்த புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஒரு வகுப்பில் தலா 55 மாணவர்களை மட்டும் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் ஜூலை 5ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு நிர்ணயித்த எண்ணிக்கையை விட கூடுதலாக அரசு பள்ளிகளில் மாணவ-மாணவியர் சேருவதற்கு விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர்.
கொரோனா காலத்தில் வேலை இழப்பு மற்றும் வருமான இழப்பு என பல்வேறு இக்கட்டான சூழலால் நடுத்தர மக்களும் ஏழை எளியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்ட முடியாத பலரும் அரசு பள்ளிகளுக்கு படையெடுக்க துவங்கி விட்டனர்.இதனால் அரசு பள்ளிகளில் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை பெறுகின்றனர்.
தனியார் பள்ளியில் படிக்க வைக்க பணம் கட்டுவதற்கு முடியாததால் அரசு பள்ளிக்கு பிள்ளைகளை மாறுகிறோம் என மங்கலம் கிராமத்தை சேர்ந்த கோபால் தெரிவிக்கிறார்..கொரோனா காலத்தில் சம்பள கிடைக்காத காரணத்தினால் அரசு பள்ளிக்கு மாறுவதாகவும் அரசுப் பள்ளிகளில் பயிற்சி நன்றாக இருப்பதினால் அரசு பள்ளியை மாறி விடுவதாகவும் பெற்றோர் கூறுகின்றனர்..
சமையல் கலைஞரான முத்து இரண்டு ஆண்டுகளாக வேலைவாய்ப்பு இல்லாததால் தனது மகளை அரசு பள்ளியில் சேர்க்க வந்துள்ளதாக தெரிவித்தார். கட்டிட தொழிலாளியான தனது தந்தை கொரோனாவால் வேலைவாய்ப்பை இழந்து விட்டதால் அவருக்கு சிரமம் கொடுக்க விரும்பாமல் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு மாறுவதாக மாணவி லோகேஸ்வரி கூறுகிறார்.
புதுச்சேரியில் 283 அரசு பள்ளிகளும் 32 அரசு உதவி பெறும் பள்ளிகளும் 181 தனியார் பள்ளிகளும் உள்ளன. இதில் அரசு பள்ளிகளில் 32 சதவித மாணவ-மாணவியர் மட்டுமே பயிலுகின்றனர்.தனியார் பள்ளிகள் மட்டுமே பெரும் அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தற்போது கொரோனா ஊரடங்கு அனைத்தையும் புரட்டி போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.