வடக்கு முஸ்லீம்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவும் -த.தே.கூ முஸ்லிம் ஆதரவாளர் வட்டம்
வடக்கு முஸ்லிம் மக்கள் இம்முறை தமது வாக்குகளை ‘தமிழ் மக்கள் நீண்டகாலமாக ஆதரித்து மக்கள் ஆணையை வழங்கிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்குவதனூடாக ஒரு முன்மாதிரிமிக்க நகர்வை முன்னெடுக்கமுடியும் என நாம் நம்புகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம் ஆதரவாளர் வட்டத்தினால அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
யாழ் ஊடக மன்றத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம் ஆதரவாளர் வட்டத்தினால் ஒருங்கிணைப்பாளர் என்.எம் அப்துல்லாவினால் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. குறித்த அறிக்கையில் உள்ளடங்கிய விடையங்களாவன
2020 பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு முஸ்லிம்களுடைய வாக்குகள் ஒரு செய்தியை சுமந்ததாக இருக்க வேண்டும் என நாம் நம்புகின்றோம். ‘மிக நீண்டகாலமாக இழுத்தடிப்புச் செய்யப்படுகின்ற எமது மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் வடக்கின் தமிழ் பேசும் மக்களாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக தமிழ் – முஸ்லிம் மக்கள் ஐக்கியமாகுதல்’ என்கின்ற இரண்டு விடயங்கள் எமது சிந்தையை ஈர்க்கின்றன.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் எங்களுடைய மக்களின் மீள்குடியேற்ற விவகாரத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எமது மக்களிடம் பரவலாக இருக்கின்றது. மீள்குடியேற்றத்திற்கான அடிப்படைகளை ஏற்படுத்துதல், திட்டமிடல்களை உருவாக்குதல், வளங்களை ஒருங்கிணைத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் இன்னமும் உரியமுறையில் அணுகப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட வடக்கு மக்களாக எம்மையும் அடையாளப்படுத்தி வடக்கின் மக்கள் அனைவருக்குமான பொதுவான மீள்குடியேற்ற செயற்றிட்டத்தோடு வடக்கு முஸ்லிம் மக்களும் உள்வாங்கப்பட வேண்டிய தேவையை நாம் உணர்கின்றோம். அதற்கான தலைமைத்துவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலேயே வழங்க முடியும்.
நாட்டில் உள்ள தற்போதைய அரசியல் நிலமைகளை அவதானிக்கின்ற பொழுது இலங்கை என்ற ஒரு சிறப்பான, பல்லின மக்களும் வாழக்கூடிய அமைதியான ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எல்லா மக்களும் ஒன்றுபட வேண்டிய தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது ஏற்பட்டிருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்களாக தமிழ் – முஸ்லிம் மக்கள் நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டியிருக்கின்றது. அதற்கான தலைமைத்துவத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கும். மேலும் தமிழ் மக்களின் ஜனநாயக வழிமுறைக்கூடான உரிமைப் போராட்டத்தில் வடக்கு முஸ்லிம்களாகிய நாமும் பங்கெடுக்க விரும்புகின்றோம். அவ்வாறே வடக்கில் தமிழ் பேசும் மக்களாக தமிழ் – முஸ்லிம் மக்கள் இணைந்து இத் தேர்தலில் ஒரு விசேட தீர்மானத்தை எடுக்க வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம்.
எனவே மேற்கூறிய விடயங்களின் அடிப்படையில் வடக்கு முஸ்லிம் மக்கள் இம்முறை தமது வாக்குகளை ‘தமிழ் மக்கள் நீண்டகாலமாக ஆதரித்து மக்கள் ஆணையை வழங்கிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு – வீட்டுச் சின்னத்திற்கு’ வழங்குவதனூடாக ஒரு முன்மாதிரிமிக்க நகர்வை முன்னெடுக்கமுடியும் என நாம் நம்புகின்றோம். இவ்வாறான ஒரு தீர்க்கமான முடிவினை நாம் பின்வரும் நியாயப்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்க முடியும்.
இலங்கை முஸ்லிம் மக்களை ஒரு தனியான இனத்துவமாகவும், இறைமை அதிகாரமுள்ள மக்களாகவும், சுயநிர்ணய உரித்துடையவர்களாகவும் அரசியல் பரப்பில் அறிமுகப்படுத்திய பெருமை தந்தை செல்வா அவர்களையே சாரும். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாப்பிலே இது மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அடிப்படைகள் முஸ்லிம் அரசியலுக்கான அடித்தளமாக அமைந்திருக்கின்றது.
முஸ்லிம் மக்களின் உரிமைக்காகவும், இன்றுவரை குரல்கொடுக்கின்ற அமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது. வடக்கின் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற வடக்கின் ஆளும் தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காணப்படுகின்றது.
வடக்கு முஸ்லிம்கள் தமிழ் மக்களுடனான நல்லிணக்கத்தை வலுப்படுத்திக்கொள்வதன் ஊடாக நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக அவ்வப்போது மேற்கொள்ளப்படும் சதிகளுக்கு எதிராக ஒரு பலமான சக்தியாகச் செயற்படும் வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறான நியாயப்பாடுகளின் அடிப்படையில் வடக்கு முஸ்லிம் மக்களாகிய நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், அதன் வேட்பாளர்களுக்கும் நல்லாதரவை வழங்குவோம்.
வடக்கு முஸ்லிம் மக்கள் 2020 பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிப்போம். தமிழ் பேசும் மக்களாக ஒன்றினைவோம். வடக்கின் மக்களாக எழுவோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments are closed.