தீர்வுக்காக ஓரணியில் செயற்படுவது தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடல் யாழ். நகரில் இன்று மாலை ஆரம்பம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் இணைத்துச் செயற்படுவது தொடர்பில் முடிவெடுப்பதற்காக யாழ்ப்பாணத்தில் இன்று கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
யாழ்ப்பாணம், நான்காம் குறுக்குத் தெருவிலுள்ள உள்ள ரெலோவின் அலுவலகத்தில் மாலை 4 மணி முதல் இந்தச் சந்திப்பு இடம்பெற்று வருகின்றது.
இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், ஏனைய கட்சிகளின் தலைவர்களான சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், என்.சிறிகாந்தா, அனந்தி சசிதரன் மற்றும் பொ.ஐங்கரநேசன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காமைக்கான காரணங்கள் தெரியவரவில்லை.