ஆண்டவர் மேல் பழியைப் போட்டுவிட்டு தப்பிவிட முடியாது; தமிழினத்துக்காக எந்த விலையையும் கொடுக்க நாம் தயார்!
“தமிழினத்தை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று ஆண்டவர் மேல் பழியைப் போட்டுவிட்டு நாங்கள் தப்பிவிட முடியாது. ஒவ்வொரு அங்குலமாக எங்களுடைய நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், எங்களுடைய இனத்துக்காக எந்த விலையையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று மாலை யாழ்ப்பாணத்தில் ரெலோவின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எமது இனத்தை அழிக்க நினைக்கின்ற அரசுக்கு எதிராக ஒரு பலமான சக்தியாக அமைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். இரண்டாவது முறையில் நாங்கள் விடுபட்ட தரப்புகளுக்கும் அழைப்பிதழ் கொடுத்திருந்தோம்.
யாழ்ப்பாணத்தில் எங்களுடைய காரியாலயத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் கலந்துகொண்டார். நாங்கள் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அதைவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர் கலந்துகொள்ளவில்லை.
நாங்கள் இதன் பிரகாரம் இந்த வாரம் நாடாளுமன்றம் கூடிய பின்னர் அடுத்த கட்டமாக மீண்டும் ஒரு கூட்டான பலமான அமைப்பாகச் செயற்படுவதற்கு ஒரு முடிவை எடுத்து இருக்கின்றோம்.அதன் பிரகாரம் அடுத்து வரும் நாட்களிலே நாங்கள் அழைக்க விரும்பிய தலைவர்களோடு பேசி இறுதியாக ஒரே குடையின் கீழ் ஒரே கூட்டாக செயற்படுவதற்கான ஒரு முடிவை எடுக்க இருக்கின்றோம்.
உண்மையிலேயே எல்லோரையும் அரவணைத்துப் போக வேண்டும் என்பதுதான் எங்களுடைய பிரதான நோக்கம். அந்தவகையிலே நாங்கள் மீண்டும் அந்தக் கட்சிகளின் தலைவர்களிடம் இது சம்பந்தமாக கலந்தாலோசித்து நேரில் சென்று அவர்களுடன் பேசி அவர்களை இந்தப் பலமான ஒற்றுமைக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவோம்.
எமக்குள் ஒற்றுமையை உருவாக்கி அரசின் எதிர்ப்பை நாங்கள் தடுக்க வேண்டும். எங்களுடைய இனத்துக்காக
எந்த விலையையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
சர்வதேசத்தில் எங்கள் சார்பாக பல நாடுகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் இந்த ஒற்றுமை பலம் சேர்க்கும் வகையில் அமையும் என்று நான் கூறுகின்றேன்.
புலம்பெயர்ந்த உறவுகளை இணைத்துக்கொண்டு இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டுத் தமிழர்களையும் இணைத்துக்கொண்டு நாங்கள் பலமான சக்தியாகக் காட்டவேண்டும். அது காலத்தின் கட்டாயம்” – என்றார்.