தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை? – வரும் 18-ஆம் தேதிக்குள் நீதியரசர் முருகேசன் அறிக்கை தாக்கல்!
பொறியியல், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதா? அல்லது சேர்க்கையில் முன்னுரிமை வழங்குவதா? என்பது தொடர்பாக வரும் 18-ஆம் தேதிக்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
பொறியியல், சட்டம், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதையடுத்து, அதை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
பள்ளிக்கல்வி, உயர்கல்வி, மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடை, வேளாண்மை, சட்டத்துறை செயலாளர்கள், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு செயலாளர் ஆகியோர் அடங்கிய குழுவின் ஆலோசனைக் கூட்டம் 3-வது முறையாக கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நீதியரசர் முருகேசன், தொழிற்படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 10 சதவிகிதத்துக்கும் கீழ் உள்ளதாகவும், அதே வேளையில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான தனியார் பள்ளி மாணவர்கள் தொழிற்படிப்புகளில் சேர்ந்து வருவதாகவும் தெரிவித்தார் நுழைவுத் தேர்வு என்பது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்றுவரை கடினமான ஒன்றாகவே இருப்பதாகவும் கூறினார்.
அரசுப் பள்ளி மாணவர்களால் தொழிற்படிப்புகளில் சேர முடியாமல் போவதற்கு பல காரணிகள் இருப்பதாகவும், அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் நீதியரசர் முருகேன் பேசினார்.
தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதா? அல்லது சேர்க்கையில் முன்னுரிமை வழங்குவதா? என்பது தொடர்பாக ஆலோசித்து, வரும் 18-ஆம் தேதிக்குள் அரசிடம் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளதாக ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் கூறியது குறிப்பிடத்தக்கது.