ஆபாச பேச்சில் கைதனா யூடியூபர் மதன் விவகாரம்- நீதிமன்றத்தின் அதிரடி! கதறும் 2k கிட்ஸ்!
பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை யூடியூப் சேனல் மூலம் ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதுடன், ஆபாச யூடியூப் தளம் நடத்தியதாக பப்ஜி மதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகம், புளியந்தோப்பு காவல் நிலையம், சைபர் கிரைம் பிரிவிலும், முதலமைச்சர் தனிப் பிரிவிலும், சென்னை மத்திய குற்றப்பிரிவிலும் புகார்கள் குவிந்தன.
இதனையடுத்து, தலைமறைவான மதனை பிடித்து, கடந்த ஜூன் 18 ஆம் தேதி தருமபுரியில் போலீஸார் கைது செய்தனர். அதன் பின்னர், ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில், விசாரணை முழுமையாக முடிவடையவில்லை, பலர் நபர்களிடம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளதால் முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது, எனவே ஜாமீன் வழங்க கூடாது என வாதிடப்பட்டது.
மேலும், மதன் தரப்பில், போதுமான எந்த ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. பெண்களை எந்த வகையிலும் துன்புறுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் ஜாமீன் வழங்கினால் விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாலும் பப்ஜி மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனால், மதன் எப்போது வெளியே வந்து விளையாடுவார் என அவரது 2k கிட்ஸ் ரசிகர்கள் ஹேஷ்டேக் பதிவு செய்து வருகின்றனர்.