காணாமல்போனோருக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இல்லை கஜேந்திரகுமார் எம்.பி. எடுத்துரைப்பு.
“தமிழ் மக்கள் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.”
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“இறுதிப் போரில் தமிழ் மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். குற்றம் இடம்பெற்றதை உறுதிப்படுத்தும் நிலைமை இருந்தும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியாது 12 ஆண்டுகள் கடந்துள்ளது. இது இனியும் தொடர்ந்தால் குற்றவாளிகள் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்த) சட்ட மூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலத்தில் திருத்தங்களை செய்ய எடுக்கும் முயற்சியை நான் வரவேற்கின்றேன்.
அதேபோல் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காரியாலயத்தை பொறுத்தவரை இந்தப் பிரேரணை வந்தபோது தற்போதைய அரசு மிக மோசமாக விமர்சித்தது.
இந்தப் பிரேரணையை அரசு நிராகரிப்பதாக கூறினர். முன்னைய அரசும் பொறுப்புக்கூறல் விடயத்தில் இருந்து விடுபட இதனைப் பயன்படுத்திக்கொண்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காரியாலையம் மிகவும் முக்கியமானதாகும். இதில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்ட தரப்பின் பக்கம் இருந்து இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. இறுதியாக அவர்கள் வாக்குமூலம் கொடுப்பதை நிராகரிக்கும் நிலைமை உருவாகியது.
அதேபோல், இராணுவத்தைத் தண்டிக்க இடமளிக்கமாட்டோம் என சிங்கள அரசியல்வாதிகள் கூறிக்கொண்டிருந்தனர். அவ்வாறு இருந்தால் எவ்வாறு நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும்?
தமிழ் மக்கள் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமது மக்களுக்கு நம்பிக்கை இல்லை” – என்றார்.