வெள்ளை வான் இல்லை; ஆனால் வீட்டுக்குள் புகுந்து தாக்கி தூக்கி செல்கிறார்கள் : தலதா அத்துக்கோரல
“இப்போது வெள்ளை வானில் வந்து கடத்தும் சம்பவங்கள் இடம்பெறுவதில்லை என்பது உண்மைதான். ஆனால், தற்போதைய அரசில் வீட்டுக்கு நேரடியாகவே வந்து அடித்து, இழுத்துத் தூக்கிச் செல்லும் சம்பவங்களை நடக்கின்றன.”
– இவ்வாறு முன்னாள் நீதி அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துக்கோரல தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“பிரபாகரனை சுட்டுக்கொன்று நாயை இழுத்து வந்ததுபோல் மீண்டும் செயற்பட என்னால் முடியுமென ஜனாதிபதி ஒரு கூட்டத்தில் பகிரங்க மிரட்டல் விடுத்தார். இப்போது பிரபாகரனுக்கு நடந்ததுபோல்தான் நடக்குமென மேல் மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஊடகவியலாளர் ஒருவரைப் பகிரங்கமாக மிரட்டுகின்றார்.
இவர்களின் கடந்த ஆட்சியில் கொலை மிரட்டல்களினால் பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படுகின்றது.
இப்போது வெள்ளை வானில் வந்து கடத்தும் சம்பவங்கள் இடம்பெறுவதில்லை என்று கூறுகின்றனர். அது உண்மைதான். ஆனால், தற்போதைய அரசில் வீட்டுக்கு நேரடியாகவே வந்து அடித்து, இழுத்துத் தூக்கிச் செல்லும் சம்பவங்களே நடக்கின்றன” – என்றார்.