மூவின மக்களின் குறைகளைக் களைந்து சேவையாற்றத் தயார்! பஸில் அறிவிப்பு.
“சிங்களம், தமிழ், முஸ்லிம் என மூவின மக்களின் தேவைகளைக் கண்டறிந்து அவர்களைத் தேடித் சென்று அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து சேவையாற்ற நான் தயாராக இருக்கின்றேன்.”
இவ்வாறு நாளை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பஸில் ராஜபக்சவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி மூலம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னரே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதியும் பிரதமரும் இந்த நாட்டை அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் முன்னோக்கிச் செல்ல உழைக்கின்றார்கள். அவர்கள் இருவரினதும் கைகளைப் பலப்படுத்தி மக்களின் பக்கம் நின்று சேவையாற்ற நான் விரும்புகின்றேன்.
எனக்கு எந்த அமைச்சுப் பதவியை வழங்குவது என ஜனாதிபதியும் பிரதமருமே தீர்மானம் எடுப்பார்கள். எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்க நான் தயாராக இருக்கின்றேன்.
மக்களின் அமோக ஆதரவுடன் நாட்டின் ஆட்சியைத் தீர்மானித்த கட்சியே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி. எனவே, கட்சி பிளவுபட ஒருபோதும் இடமளியேன். கட்சியை மென்மேலும் வலுப்படுத்துவேன்.
நாட்டின் நல்லிணக்கத்துக்காகத் தமிழ்க் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட ஆளும் – எதிரணியிலுள்ள அனைத்துக் கட்சிகளுடனும் நான் பேச்சு நடத்துவேன்” – என்றார்.