தமிழக பாஜக தலைவர் எல். முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி?
பிரதமர் மோடி தலைமையில் 2019-ம் ஆண்டு மே மாதம் பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றது. இந்த பா.ஜ.க அமைச்சரவையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரு கேபினட் அமைச்சருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. உதாரணமாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயம், கிராமப் புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், உணவு பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக உள்ளார். மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாந்த், ‘சட்டம் மற்றும் நீதி, தொலைதொடர்பு, தகவல்தொழில்நுட்பத்துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சர்களாக உள்ளார்.
அதேபோல, ஹர்ஷவர்த்தன், பியூஸ் கோயல், பிரகலாத் ஜோஷி ஆகியோரும் மூன்று துறைகளுக்கு அமைச்சர்களாக உள்ளனர். அதேபோல, மத்திய விவசாயத்துறை அமைச்சராக இருந்த அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்ஷிம்ரத் கவுர் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்த பிறகு, அனைத்து அமைச்சர்களும் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல் இருந்துவருகிறது.
எனவே, மத்திய அமைச்சரவை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஒரு மாத காலத்துக்கு மேலாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது என்று ஊடகங்களில் செய்திகள் வந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்றைய ஆளுநர்கள் நியமனம் இருந்தது. இந்தநிலையில், இன்று மாலை 6 மணிக்கு புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இன்றைய பதவியேற்பில் புதிய மற்றும் ஏற்கெனவே அமைச்சர்களாக உள்ளவர்கள் என்று 43 பேர் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய பதவியேற்கும் அமைச்சரவையில், எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் பெண்கள் உரிய அளவில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டதாக இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
காங்கிரஸின் முக்கியத் தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் பா.ஜ.கவில் இணைந்தார். ஆனால், அவருக்கு மத்திய அமைச்சரவை இடம் வழங்கப்படவில்லை. எனவே, தற்போதைய மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் சிந்தியா, சர்பானந்தா சோனாவால், பூபேந்திர யாதவ் உள்ளிட்டவர்களுக்கு இடமளிக்கப்படும் என்று தெரிகிறது.
அதேபோல, தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற தீவிரமாக முயற்சி செய்துவரும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் பிரதிநித்துவம் வழங்கப்படாமல் இருந்துவருகிறது. எனவே, அந்த அடிப்படையில் தற்போதைய பா.ஜ.க தலைவர் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று செய்திகள் வெளிவருகின்றன. மேலும், எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அமைச்சரவையில் இடமளித்தால் தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு அமைச்சரவையில் இடம் மற்றும் எஸ்.சி சமூக பிரதிநிதிக்கு இடம் என்ற இரண்டு அம்சங்கள் பூர்த்தியாகும்.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தமிழக அரசியலில் நேரடியாக ஈடுபடாதவர்கள். எனவே, அவர்கள் தமிழக மக்களுடன் பரிட்சயம் இல்லாதவர்கள். அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவையில் பா.ஜ.கவுக்கு பிரதிநிதித்துவம் வாங்கிக் கொடுத்தவகையில் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.