நான் மரணம் அடைந்தாலும் அடைவேனே தவிர ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்: தொண்டர்களுக்கு லாலு பிரசாத் யாதவ் மெசேஜ்
கொஞ்சம் உடல்நிலை தளர்ந்த லாலு பிரசாத் யாதவ் பேசப் பேச தொண்டர்கள் லாலு ஜிந்தாபாத் என்று கோஷமெழுப்பியுள்ளனர்.
அதுவும் குறிப்பாக, ‘நான் மரணித்தாலும் மரணிப்பேனே தவிர பின்வாங்க மாட்டேன் என்று கூறிய போது தொண்டர்கள் மேலு உரக்க ஜிந்தாபாத் என்று கோஷமிட்டதாக இந்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விரைவில் தான் பாட்னா வருவதாகவும் பீகார் முழுதும் பயணித்து தொண்டர்களைச் சந்திப்பேன் என்றும் லாலு கூறினார்.
பீகாரில் ஆளும் பாஜக-ஐக்கிய ஜனததாள-நிதிஷ் குமார் தலைமைக் கூட்டணியை சரமாரியாகக் கிண்டல் செய்தார் லாலு. எலி உடல் பருத்து குண்டாகிப்போனால் அது கல்குழவியாகத்தான் இருக்கும் என்று போஜ்பூரி மொழிக்கேயுரிய பிரத்யேக வழக்கு ஒன்றை லாலு பிரயோகித்து பாஜக-ஜேடியு வளர்ச்சி இத்தகைய கல்குழவி போன்றதுதான் என்று கிண்டல் செய்தார்.
மேலும் பாஜகவின் மதச்சாய அரசியலையும் சாடி இந்தியாவுன் சமூக இழைமத்தையே பாஜக அழிக்கப்பார்க்கிறது என்றார். “அயோத்திக்குப் பிறகு பாஜகவில் மதுராவைப் பேசத்தொடங்கி உள்ளனர். தேசத்தை அழிக்க முடிவு செய்து விட்டார்களா?” என்றார்.
மேலும் வேலையின்மை, பெட்ரோல் டீசல் விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, கொரோனாவினால் ஏற்பட்ட பேரழிவு நிதிஷ் குமார் தலைமையில் குறையாக குற்றம், ஊழல், ஏழைகள் மாநிலத்தை விட்டு பிழைப்புக்காக வெளியேறுவது என்ற சமுதாயப் பிரச்சனைகளையும் பேசினார் லாலு.
முன்னாள் கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே தனக்கு கூறிய கட்சிப் பெயரான ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்ற பெயரைத்தான் கட்சிக்குச் சூட்டியுள்ளதாக கூறிய அவர் ராமகிருஷ்ண ஹெக்டே ஒரு சோசலிஸ்ட் என்றார். மீண்டும் செயல்பூர்வ அரசியலுக்கு லாலு திரும்பினால் அது பீகாரின் அரசியல் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் என்று தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.