2 குழந்தைகளுக்கு அதிகமுள்ள பெற்றோருக்கு கட்டுப்பாடு விதிக்கும் மசோதா – உத்தரப் பிரதேசத்தில் சர்ச்சை
2012-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, உத்தரபிரதேசத்தில் 20.43 கோடி பேர் வசிக்கின்றனர். அங்கு மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருப்பதால் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.
இதனடிப்படையில், புதிய வரைவு மசோதாவை சுகாதார அமைச்சகம் தயார் செய்துள்ளது. 2 குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீறியவர்களுக்கு சலுகைகள் பறிக்கப்படுவதாக இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அரசு வேலைவாய்ப்பு பெற தடை விதிக்கப்படும்.
மாநில அரசின் நலத் திட்டங்கள் வழங்கப்படமாட்டாது. ரேஷன் பொருட்கள் 4 பேருக்கு மட்டுமே வழங்கப்படும். உள்ளூர் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்படும். அரசு பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது. அரசு வேலையில் சேரும் போது இரண்டு குழந்தை இருப்பின் அவர்கள், இந்த கொள்கைக்கு முரணாக செயல் பட மாட்டோம் என்ற உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே அரசு பணியில் அல்லது உள்ளாட்சி நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு பொருந்தாது.
2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ளும் தம்பதியினருக்கு பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி வீடு கட்டவும், வாங்கவும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். மின் கட்டணம், குடிநீர், வீட்டு வரி ஆகியவற்றில் சலுகை அளிக்கப்படும். கூடுதலாக இரு முறை சம்பள உயர்வு, சம்பளத்துடன் கூடிய 12 மாத பேறுகால விடுப்பு ஆகியவை அளிக்கப்படும்.
ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்பவர்களுக்கு கூடுதலாக இலவச சிகிச்சை அளிக்கப்படும். ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களில் முன்னுரிமை, பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும். பெண் குழந்தையாக இருப்பின், உயர்கல்வி கற்க உதவித்தொகை அளிக்கப்படும்.
ஒரு குழந்தை பெற்ற பின் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களுக்கு, ஆண் குழந்தையாக இருப்பின் 80 ஆயிரம் ரூபாயும் பெண் குழந்தையாக இருப்பின் 1 லட்ச ரூபாயும் அளிக்கப்படும் என்றும் புதிய மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதா குறித்து அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் மத்தியில் கருத்துக் கேட்ட பின் ஜூலை 19ஆம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.