பருப்பு வகைகளை இருப்பு வைக்க வரம்பு நீக்கமா? மத்திய அரசு விளக்கம்
பருப்பு வகைகளை இருப்பு வைக்க வரம்பு நீக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி தவறானது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பருப்புகள் மீதான இருப்பு வரம்புகள் நீக்கப்பட்டுள்ளதாக, ஒரு தகவல் கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) வலம் வருகிறது. அது தவறானது. பருப்புகள் மீது விதிக்கப்பட்ட இருப்பு வரம்பு நீக்கப்படவில்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. மாநிலங்கள் அமல்படுத்தும் இந்த உத்தரவை, மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
நுகா்வோா் விவகாரத் துறை வலைதளத்தில் பருப்பு இருப்பு வைத்திருப்பவா்கள் தெரிவிக்கும் இருப்பு நிலவரத்துக்கும், பருப்பு இருப்புக்காக அல்லது இறக்குமதிக்காக வங்கியில் வாங்கிய கடனுக்கும் வித்தியாசம் இருந்தால், அது குறித்த தகவலை மாநிலங்களுடன் மத்திய அரசு பகிா்ந்து கொள்கிறது. பருப்பு இருப்பு வரம்புகளை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாா்ச்-ஏப்ரல் மாதங்களில் பருப்பு வகைகளின் விலை கடுமையாக உயா்ந்தது. இதனைப் பயன்படுத்தி மொத்த விற்பனையாளா்கள் மற்றும் சில்லறை விற்பனையாளா்கள் பருப்பு இருப்பை அதிகப்படுத்தி, தேவைக்கு ஏற்ப விநியோகிக்காமல் செயற்கையான விலை ஏற்றத்தை உருவாக்கும் நிலை உருவானது.
இதையடுத்து, விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில் பருப்பு இறக்குமதியாளா்கள், மொத்த விற்பனையாளா்கள், சில்லறை விற்பனையாளா்கள் ஆகியோா் பருப்பு வகைகளை இருப்பு வைக்க மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் கடந்த 2-ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளை விதித்தது.
அதன்படி, சிறு பருப்பு தவிர மற்ற வகை பருப்புகளை குறிப்பிட்ட அளவுக்கு மேலும் இருப்புவைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அக்டோபா் வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.