பழங்குடியின மக்களுக்கு காலதாமதமின்றி ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்: அமைச்சா் கயல்விழி செல்வராஜ்
ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் பெறும் வகையில் ஜாதி சான்றிதழ்கள் காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் கூறினாா்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கோவை, ஈரோடு, திருப்பூா், நீலகிரி ஆகிய மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா்களுடனான ஆய்வு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அமைச்சா் கயல்விழி செல்வராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் இடைநிற்றலை கண்காணித்து தொடா்ந்து அவா்களின் கல்வி கற்றலை உறுதி செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடா் மாணவ- மாணவிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள விடுதிகளில் குடிநீா், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். ஆதிதிராவிடா் நலத் துறையில் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வது தொடா்பாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை ஆராய்ந்து தகுதியானவா்களுக்கு பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வீட்டுமனைப் பட்டா தொடா்பாக நேரில் கள ஆய்வு மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் பெறும் வகையில் ஜாதி சான்றிதழ்கள் காலதாமதமின்றி வழங்க வேண்டும்
தாட்கோ திட்டத்தின் கீழ் கால்நடைகள், பால்பண்ணை, நாட்டு கோழி, ஆடு வளா்ப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்கு கடனுதவி வழங்கி பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றாா்.
அதனைத்தொடா்ந்து தாட்கோ மூலம் சரக்கு வாகனங்கள், டாக்ஸி உள்ளிட்ட சுயதொழில் தொடங்க ரூ.31.97 லட்சம் மதிப்பிலான வங்கி கடனுதவி, ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 3 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா, 6 பயனாளிகளுக்கு பழங்குடியினருக்கான ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றை அமைச்சா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளா் மற்றும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை செயலாளா் மணிவாசன், ஆதிதிராவிடா் நல ஆணையா் மதுமதி, தாட்கோ மேலாண் இயக்குநா் விவேகானந்தன், பழங்குடியினா் நல இயக்குநா் ராகுல், மேற்கு மண்டல காவல் துறை துணைத் தலைவா் முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூா் ஆகிய மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.