வங்கியில் ரூ.100 கோடி மோசடி செய்த ஊழியர்கள் – சிக்கியது எப்படி ?
கேரளத்தைச் சேர்ந்த கருவன்னூர் கூட்டுறவு வங்கியில் ரூ.100 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாட்டம் இரிஞ்சலகுடாவில் உள்ள கருவன்னூர் வங்கியில் இருந்து உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கு தெரியாமல் அவர்களது சொத்தின் மீது கடன் பெறப்பட்டுள்ளது. இந்தக் கடன் தொகையானது சில குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு பல முறை செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கடன் பெறுவதற்கு பொய்யான சான்றிதழ்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வங்கியில் இருந்து நிலுவைத் தொகை குறித்து கடிதம் வந்த பிறகே வாடிக்கையாளர்களுக்கு இதுபற்றி தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து வாடிக்கையாளர்கள் புகாரளித்திருக்கின்றனர். அதன் பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனயைடுத்து வங்கியின் செயல்பாடுகள் குறித்து சிலர் கேள்வி எழுப்ப, வங்கியின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. அப்போது குற்றம் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், ரூ.100 கோடி அளவுக்கு வங்கியில் மோசடி நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த மோசடி குறித்து வங்கியின் செயலாளர் உட்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து இணை பதிவாளர் விளக்கம் நிர்வாகக் குழுவிடம் விளக்கம் கேட்டுள்ளார்
வங்கியின் செயலாளர் டி.ஆர். சுனில்குமார் சிபிஎம் கட்சியின் உள்ளூர் பிரமுகர். இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் இந்த விவகாரத்தில் சரியான விசாரணை நடைபெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கே.கே.அனீஷ்குமார், வங்கியில் இருந்து ரூ.300 கோடி கடன் தொகையாக பெற்று, பல்வேறு கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.