இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி சகலரும் ஒன்றாகப் பயணிப்போம் – மைத்திரி அறைகூவல்.
தேசிய இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு அனைவரும் ஒன்றாக பயணிப்பதன் மூலமே பிரச்சினைகளில் இருந்து நாட்டை மேலெழுப்ப முடியும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“உதய கம்மன்பிலவை அமைச்சர் பதவியில் இருந்து விலக்கும் அளவுக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தவறாகக் கூற முடியாது. எந்தவொரு அரசும் தானே விரும்பி அதனை அதிகரிப்பதில்லை.
காலத்துக்குக் காலம் அரசுகள் மாறினாலும் நிலையான தேசிய கொள்கையொன்றை உருவாக்கிக் கொள்ளும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மாறாக அமைச்சுப் பதவி மாறினாலும் கொள்கையை மாற்றிக்கொள்ளும் நிலை இனியும் தொடரக்கூடாது.
பொருளாதார நெருக்கடியின் அடிப்படையில் நாடு இன்று பல பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்து வருகின்றது. கடந்த 40 ஆண்டுகால அரசுகளின் பலவீன செயற்பாடுகளின் விளைவுகளே இன்றைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம்.
இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வேளையில் கடந்த கால பலவீனமான செயற்பாடுகளைக் கருத்தில்கொள்ள வேண்டும்.
அரச வங்கிகளில் அரசு கடன்களைப் பெற்றுக்கொள்வது குறித்தும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூறப்பட்டுள்ளது. அரச வங்கிகளில் கடன் வாங்காத அரசு எதுவென தேடிப்பிடிக்க முடியாது.
அரச வங்கிகளில் கடன்களைப் பெறுவது அல்லது சர்வதேச கடன்களைப் பெற்றுக்கொள்வதை சகல அரசுகளும் கையாண்டுள்ளன. எமது அரசிலும் அதனைச் செய்துள்ளோம்” – என்றார்.