சம்பந்தன், மாவை, செல்வம் ஆகியோரை தமிழர் இம்முறை தோற்கடிக்க வேண்டும் : எஸ்.லோகநாதன்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தக்க பாடம் ஒன்றைத் தமிழ் மக்கள் இம்முறை புகட்ட வேண்டும். குறிப்பாக எம்மை ஏமாற்றி நடு வீதியில் விட்ட சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை நாம் இம்முறை தோற்கடிக்க வேண்டும். சிரேஷ்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை வடக்கு, கிழக்கு மக்களாகிய நாம் பலப்படுத்த வேண்டும். ஏனெனில் எதிர்வரும் அரசில் பலம் பொருந்திய அமைச்சராக அவர் இருப்பார். தொழில் இல்லாமல் உள்ள எமது இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினைகளையும் அபிவிருத்தியையும் அவரினால் பெற முடியும்.”

– இவ்வாறு அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம், காரைதீவுப் பகுதியில் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நம்பிக்கை இல்லாமல் இருந்த எம்மை கிழக்கில் செயற்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே ஆதரவைத் தெரிவித்து வந்தோம். விடுதலைப்புலிகளில் இருந்த நம்பிக்கையில்தான் கூட்டமைப்பினருக்கு ஆதரவை வழங்கியிருந்தோம்.

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்படுகின்றபோது சம்பந்தனுக்கோ அல்லது மாவை சேனாதிராஜாவுக்கோ தொலைபேசியில் தொடர்பை நாம் மேற்கொள்ளும்போது தாங்கள் ஒரு கூட்டத்தில் இருக்கின்றார்கள் எனக் கூறி இரவு வேளையில் தொடர்புகொள்ளுமாறு கேட்பார்கள். ஆனால், இரவு வேளையில் தொலைபேசியினூடாகத் தொடர்புகொள்ள முயற்சித்தால் தொடர்பைத் துண்டித்து விடுவார்கள். செல்வம் அடைக்கலநாதனும் அப்படித்தான் எம்மைப் புறக்கணித்தார். அடுத்ததாக இவர்களுக்கு அனுப்பும் கடிதங்களுக்குக்கூட பதிலளிப்பதில்லை. கூட்டம், கலந்துரையாடல் என மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வுகளையும் காணாது இவர்களது செயற்பாடு அமைந்துள்ளது.

எங்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடன் கதைக்க முடியாமல் இருப்பது சிரமமாக உள்ள நிலையில் தமிழ் மக்கள் எவ்வாறு இவர்களை சந்திப்பது என்ற கேள்வி எழுகின்றது.

தேர்தல் காலங்களில் மாத்திரம் வடக்கு, கிழக்கு மக்களை ஏமாற்றி அதைச் செய்யப் போகின்றோம்; இதைச் செய்யப்போகின்றொம் எனக் கூறி இனப்பிரச்சினை தீர்ப்பது தொடர்பாக தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றி வந்திருக்கின்றது. இன்று மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கின்றார்கள். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்றம் சென்று சுகபோக வாழ்க்ககையை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றனர். எனவே, மக்கள் இம்முறை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தகுந்த பாடம் ஒன்றைக் கற்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

குறிப்பாக எம்மை ஏமாற்றி நடு வீதியில் விட்ட சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை நாம் தோற்கடிக்க வேண்டும். சிரேஷ்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை வடக்கு, கிழக்கு மக்களாகிய நாம் பலப்படுத்த வேண்டும். ஏனெனில் எதிர்வரும் அரசில் பலம் பொருந்திய அமைச்சராக அவர் இருப்பார். தொழில் இல்லாமல் உள்ள எமது இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினைகளையும் அபிவிருத்தியையும் அவரினால் பெற முடியும்” – என்றார்.

Comments are closed.