தீர்வு கிடைக்காததால் தொடர்கின்றது அதிபர்கள், ஆசிரியர்களின் போராட்டம்.
ஆசிரியர் சமூகத்தினரின் கோரிக்கைகளுக்குத் தீர்வுகள் கிடைக்காத காரணத்தால் நாடு முழுவதும் அதிபர்கள், ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று ஜனாதிபதி செயலாளருடன் நடத்தப்பட்ட பேச்சின் பின்னரே ஜோசப் ஸ்டாலின் மேற்கண்டவாறு கூறினார்.
சம்பள முரண்பாட்டுப் பிரச்சினை, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அதிபர்கள், ஆசிரியர்களை அணிதிரட்டி இன்று கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
கோட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.
இதன்போது ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலகத்துக்குள் சென்று ஜனாதிபதி செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சில் ஈடுபட்டனர்.
இந்தப் பேச்சின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜோசப் ஸ்டாலின், “எங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகள் எதனையும் அதிகாரிகள் வழங்கவில்லை. இந்தப் பேச்சு தோல்வியிலேயே முடிவடைந்தது. இதனால் எங்களின் போராட்டம் தொடரும்” – என்று குறிப்பிட்டார்.