டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

தமிழக ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக தூத்துக்குடிக்கு சனிக்கிழமை வருகை தந்தார். ஊரக உள்ளாட்சி துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும் குளம் புனரமைப்பு பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

மீளவிட்டான் அருகே 132 ஏக்கர் பரப்பளவுள்ள சி.வ. குளத்தில் 11 கோடியே 50 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகளான கரையை பலப்படுத்துதல், வரத்து கால்வாயை சீர்செய்தல், குளம் தூர்வாருதல் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையப் பகுதியில் சுமார் ரூ.50 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ததுடன் திட்டம் நிறைவு காலம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், முந்தைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் தற்போது வரையிலும் முடிக்கப்படாமல் உள்ளது. அதை விரைவாக முடிக்கும் பொருட்டு பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாநகரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் உள்ளாட்சித் துறை வளர்ச்சித் திட்டப் பணிகளையும் இன்று ஆய்வு செய்துள்ளோம். தூத்துக்குடியில் மழைநீர் தேங்குவதை தவிர்க்கவும் சாலைகளை சீர்செய்திடவும் திட்டப்பணிகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

நவம்பர், டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்திமுடிக்க முதல்வர் தெரிவித்துள்ளார். தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அடிப்படை பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் தமிழகத்தில் சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல சில நகரங்கள், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளன. இதற்கான அறிவிப்புகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார். அதை தொடர்ந்து அங்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும். மேலும் பருவமழை காலம் தொடங்க உள்ளதால் மழை காலம் நிறைவு பெற்றதும் தேர்தல் தொடங்கும் என்றார்.

ஆய்வின்போது, தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் பல முக்கிய அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.