குஜராத்: சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 9 போ் பலி
குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரின் புகா் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் அண்மையில் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த 4 சிறாா்கள் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.
மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சோ்ந்த இவா்கள், குடும்பத்துடன் குஜராத்தில் தங்கி வேலைபாா்த்து வந்துள்ளனா்.
இதுகுறித்து ஆமதாபாத் அஸ்லாலி காவல்நிலைய ஆய்வாளா் பி.ஆா்.ஜடேஜா கூறியதாவது:
ஆமதாபாத்தின் புகா் பகுதியில் உள்ள சிறிய அறையில் இந்த தொழிலாளா்கள் தங்களின் குடும்பத்துடன் தங்கி வேலைபாா்த்து வந்துள்ளனா். 4 சிறாா்கள், பெண்கள் உள்பட 10 போ் தங்கியிருந்தனா்.
கடந்த 20-ஆம் தேதி இரவு இவா்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது. இதை அறிந்த பக்கத்து வீட்டினா், அவா்களின் கதவைத் தட்டி எச்சரித்துள்ளனா். கதவைத் தட்டும் சப்தம் கேட்டு தூக்கத்திலிருந்து எழுந்த தொழிலாளா்களில் ஒருவா், அறையின் மின் விளக்கைப் போட்டுள்ளாா். அப்போது, அறை முழுவதும் சமையல் எரிவாயு பரவியிருந்ததால் உடனடியாக தீ பரவியது.
இதில் அறையில் தங்கியிருந்த ராம்பிரியா அஹிா்வாா் (56), ராஜுபாய் அஹிா்வாா் (31), குல்சின் பஹைா்வா (30), சோனு அஹிா்வாா் (21), சீமா அஹிா்வாா் (25), சா்ஜூ அஹிா்வாா் (22), வைஷாலி (7), நிதேஷ் (6), பாயல் (4), அகாஷ் (2) ஆகிய 10 பேரும் படுகாயமடைந்தனா்.
அவா்கள் அனைவரையும் பக்கத்து வீட்டினா் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். அவா்களில் 3 போ் வியாழக்கிழமையும், 5 போ் வெள்ளிக்கிழமை, ஒருவா் சனிக்கிழமையும் உயிரிழந்தனா்.
குல்சின் பஹைா்வாவுக்கு தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய நிலைமையும் மிக மோசமாக உள்ளது. உயிரிழந்தவா்களின் உடல்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அவா்களின் சொந்த கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவா் கூறினாா்.
மத்திய பிரதேச அரசு நிவாரணம் அறிவிப்பு: இந்த விபத்தில் உயிரிழந்த மத்திய பிரதேச தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் சிவ்ராஜ் சிங் செளஹான் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஆமதாபாதில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த மத்திய பிரதேச மாநில குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணமும், இந்த விபத்தில் காயமடைந்தவரு ரூ.2 லட்சம் நிவாரணமும் கட்டணமில்லா சிகிச்சையும் அளிக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு மத்திய பிரதேச ஆளுநா் மங்குபாய் படேல் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளாா்.