தமிழகத்தில் மீண்டும் லாட்டரியா? நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் லாட்டரி அறிமுகம் செய்யப்படப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசை விமர்சித்திருந்த நிலையில், கட்டுக்கதைகளை கூறி முதல்வரின் பெயருக்கு கலங்கம் கற்பிக்க வேண்டாம் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளித்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
லாட்டரி சீட்டை மீண்டும் திமுக அரசு கொண்டு வர முயற்சிக்க வேண்டாம் என்று உண்மைக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று வரலாற்றில்தனி முத்திரை பதிக்கும் ஒரு பொய் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் நான்காண்டு கால ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழகம் எத்தகைய சரிவை சந்தித்துள்ளது என்பதை 15வது நிதிக்குழுவும் மத்திய ரிசர்வ் வங்கியும் அதிகாரப்பூர்வமாக சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், 2017-18 மற்றும் 2018-19 மாநில நிதி குறித்த சி.ஏ.ஜி.யின் தணிக்கை அறிக்கை ஆகியவற்றை சட்டமன்றத்துக்கு கூட காட்டாமல் மூடி வைத்தவர் எடப்பாடி பழனிசாமி என்றும் திமுக ஆட்சி அமைந்ததும் அவை மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு கடந்த அதிமுக ஆட்சியின் தோல்விகள் பொதுவெளிக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இனி வரப்போகும் வெள்ளை அறிக்கையில் அதிமுக ஆட்சியின் நிர்வாக தோல்வி மேலும் வெளிப்பட போவதாக தெரிவித்துள்ள அவர், நிதித்துறையின் பல்வேறு கோப்புகளில் கையெழுத்து போடாமல் மூட்டை கட்டி வைத்தவர்கள் கடந்த ஆட்சியர்கள் என்றும் உயிர் நீத்த காவல்துறையினருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அறிவிக்கப்பட்ட முதலமைச்சர் தலைமையிலான பேரிடர் ஆணைய நிதி வழங்கும் கோப்புகளைக்கூட கையெழுத்திடாமல் விட்டு சென்றவர்கள் அதிமுக ஆட்சியர்கள் என்றும் விமர்சித்துள்ளார்.
தமிழக அரசு கொரோனா இரண்டாவது அலையை திறமையாக கையாண்டுள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்துவரும் நிலையில், லாட்டரி பற்றி ஒரு கற்பனையை தனக்கு தானே உருவாக்கி கொண்டு எடப்பாடி பழனிசாமி இவ்வாறு களங்கம் கற்பிப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
அரசின் ஆலோசனைகள், ஆய்வுக் கூட்டங்களில் ஒருமுறை கூட லாட்டரி பற்றிய பேச்சே இதுவரை எழவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர், கடந்த ஆட்சியாளர்களால் சிதலமடைந்த நிதி நிலையை சரி செய்யும்நெருக்கடி அரசுக்கு இருந்தாலும், நிதி ஆதாரத்தை பெருக்கும் வழிகளில் லாட்டரி பற்றிய சிந்தனையே அரசுக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.