டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்; தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு
பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இன்று சந்திக்கின்றனர்.
காலை 11.05 மணிக்கு பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்கிறது. இதற்காக காலையில் புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றடைந்தார். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு கோவை விமானநிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் பயணித்தார்.
தமிழக அரசியல் சூழல், கட்சி விவகாரங்கள் குறித்து பிரதமருடன் இருவரும் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் மேகதாது அணை விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேச்சு நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கு பின் முதல்முறையாக இருவரும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்கள். தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் உள்ள கட்சிக்கு தான் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருப்பதால் அது தொடர்பாகவும் பேசப்படலாம் என தகவல்கள் தெரவிக்கின்றன.