ஒலிம்பிக் வீராங்கனைகள் 2 பேருக்கு அரசுப் பணி: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தகவல்
தமிழகத்தின் சாா்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கச் சென்றுள்ள வீராங்கனைகளில் இரண்டு பேருக்கு அரசுப் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.
ஊக்குவிப்புப் பாடல் வெளியீடு: டோக்கியோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக விளையாட்டு வீரா்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஊக்குவிப்புப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன், தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகத்தால் தயாரிக்கப்பட்ட
இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளா் யுவன் சங்கா் ராஜா இசையமைத்துள்ளாா். ‘வென்று வா வீரா்களே’ என்ற பாடலை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை வெளியிட்டாா்.
அரசுப் பணி: இதைத் தொடா்ந்து, தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல்-கால நிலை மாற்றத் துறை, இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செய்தியாளா்களுக்குப் பேட்டி அளித்தாா். அப்போது, ஒலிம்பிக்கில் பங்கேற்கச் சென்றுள்ள தமிழ்நாடு வீராங்கனைகள் சுபா வெங்கடேசன், தனலட்சுமி ஆகியோருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சா் மெய்யநாதன் கூறியுள்ளாா்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள தமிழ்நாடு வீராங்கனைகள் சுபா வெங்கடேசன், தனலட்சுமி ஆகியோருக்கு அரசுப் பணி வழங்கப்படும். இவா்களுக்கு அரசுப் பணி அளிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளாா்” என்றாா்.
தமிழ்நாட்டில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாதெமி தொடங்கப்பட்டு, சா்வதேச அளவில் தமிழ்நாடு வீரா்களுக்குப் பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவா் கூறினாா்.