ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் கருத்துகளைத் தெரிவித்தார் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தில்லியில் தகவல் தொழில்நுட்பத் துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் 2021-ஆம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா தொடர்பான தனது கருத்துகளை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2021-ஆம் ஆண்டு ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிதரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்பத் துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்தக் குழுவிடம் தனது கருத்துகளைக் கூற கமலஹாசன் செவ்வாய்க்கிழமை தில்லி வந்தார். நாடாளுமன்றத்தின் இணைப்புக் கட்டடத்தில் நிலைக்குழுவிடம் தனது கருத்துகளை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதாவுக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவர் கமல்ஹாசன். சினிமா, ஊடகங்கள், கல்வியறிவு ஆகிய மூன்றும் இந்தியாவில் பலரும் அறிந்த மூன்று குரங்குகளாக (காந்தி) மட்டுமே இருக்க முடியாது. அதனால், வரவிருக்கும் தீமைக்கு எதிராக குரல் கொடுப்பதே ஜனநாயகத்தைக் காக்கும் சிறந்த மருந்தாக இருக்கும். சுதந்திரத்துக்கான உங்கள் அக்கறைக்கு குரல் கொடுங்கள் என்று தனது எதிர்ப்பை சுட்டுரையில் பதிவு செய்திருந்திருந்தார்.
பின்னர் தமிழகத்தைச் சேர்ந்த பல திரைப்படக் கலைஞர்களும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.
இதன்தொடர்ச்சியாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 2021- ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா தொடர்பாக தன்னுடைய கருத்தை நேரடியாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் இடம் பெற்ற நிலைக்குழு முன்பு ஆஜராகி, நிலைக் குழுத் தலைவர், உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கும் தனது கருத்தை பதிலளித்து பதிவு செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.