வெயில் பட காட்சிகளை நினைவுபடுத்தும் நிகழ்வு.. 45 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்த நபர்!
குடும்ப உறுப்பினர்களால் இறந்துவிட்டதாக நம்பப்பட்ட நபர் ஒருவர் 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தாயகம் திரும்ப இருப்பதால், அவரது குடும்பத்தினர் எல்லையில்லா சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். ஒரு உணர்ச்சி ரீதியான மறு இணைவு சம்பவம் கேரளாவில் நடக்க இருக்கிறது. கோட்டயம், சாஸ்தம்கோட்டாவில் வசிக்கும் 70 வயதான சஜித் துங்கல் 1974 ஆம் ஆண்டில் அபுதாபியில் வேலை செய்வதற்காக தனது சொந்த ஊரை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு 22 வயது இருக்கும்.
தனது பெற்றோர், நான்கு சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகளை தாய்நாட்டிலேயே விட்டுவிட்டு வளைகுடா நாட்டில் குடியேறினார். அங்கு, கலை மற்றும் கலாச்சாரத்தின் மீது ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். இறுதியில், அவர் மலையாள திரைப்படத் திரையிடல்கள் மற்றும் இந்திய நடனக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களைக் கொண்ட இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பணியை தொடங்கினார்.
இந்த நிலையில், 1976ம் ஆண்டு அக்டோபர் மாதம் துங்கல், தான் 10 நாட்கள் பணிபுரிந்த ஒரு கலை குழுவினருடன் ஒரு விமானத்தில் சென்றபோது விமானம் விபத்துக்குள்ளானது. பம்பாய் வழியாக மெட்ராஸுக்கு செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 95 பணியாளர்கள் மற்றும் பயணிகளை ஏற்றிச் சென்றது. பம்பாயில் உள்ள சாண்டா குரூஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரம் தீப்பிடித்ததால் இந்த கோர சம்பவம் நடந்தது. இந்த விபத்தில் துங்கல் இறந்துவிட்டதாக கூறப்பட்டது.
இதனால் கடந்த நான்கு தசாப்தங்களாக, துங்கல் விமான விபத்தில் இறந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தினர் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் உண்மையில் அவர் உயிரிழக்கவில்லை என்பது தான் சுவாரசியமான விஷயம். நேஷனல் வெளியிட்ட செய்தி அறிக்கையின்படி, துங்கல் 1982 ஆம் ஆண்டில் அபுதாபியிலிருந்து பம்பாய்க்கு சென்றுள்ளதாகவும் அன்றிலிருந்து அவர் அங்கு வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அங்கு அவர் தனது சொந்த தொழில்களை தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவை அனைத்தும் தோல்வியுற்றன.
இறுதியில், அவர் பிழைப்புக்காக மிகச்சிறிய மற்றும் மோசமான வேலைகளைச் செய்து வந்துள்ளார். செய்தி நிறுவனத்துடன் பேசிய அவர், ” எனது குடும்பத்தினரை ஒருபோதும் தொடர்பு கொள்ளாததற்குக் காரணம், நான் வாழ்வில் தோல்வியுற்றவனை போல உணர்ந்தேன்” என்று கூறினார். எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறி தனது குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள வேண்டும் என்று நினைத்து பம்பாய்க்குச் சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு எதுவும் கைகொடுக்கவில்லை. இப்படியே, 45 ஆண்டுகள் கடந்துவிட்டன.
அதிர்ஷ்டவசமாக, அவர் தனது நண்பர் ஒருவரால் 2019 ஆம் ஆண்டில் மிக மோசமான நிலையில் மீட்டெடுக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் மும்பையில் பாஸ்டர் கே.எம். பிலிப் நடத்தும் ஒரு தங்குமிடத்திற்கு கொண்டு வரப்பட்டார். பாஸ்டர் பிலிப்பின் சமூக மற்றும் எவாஞ்சலிகல் அசோசியேஷன் ஃபார் லவ் (சீல்) அமைப்பு காணாமல் போனவர்களை அவர்களது குடும்பங்களுடன் ஒன்றிணைக்கும் பணியில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. அங்கு தங்கியிருந்த துங்கலிடன் அவரது குடும்பத்தினரை பற்றி விசாரித்த போது அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
அதைத் தொடர்ந்து கோட்டையத்தில் உள்ள உள்ளூர் மசூதியில் துங்கல் குடும்பத்தின் இருப்பிடம் குறித்து இந்த அமைப்பின் உறுப்பினர்கள் விசாரித்தனர். அதிர்ஷ்டவசமாக, மசூதி இமாம் துங்கலின் குடும்பத்தைப் பற்றி அறிந்திருந்தார். மேலும் சீலின் பணியாளரை துங்கலின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இதையடுத்து தனது குடும்பத்தினருடன் வீடியோ அழைப்பில் பேசினார். துங்கல் உணர்ச்சிவசப்பட்டதால் அவரால் பேச முடியவில்லை.
இப்போது, அவர் வீட்டிற்கு செல்ல விரும்புவதாகவும் மற்றும் மும்பையில் தன்னை கவனித்துக்கொண்ட மக்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தார். துங்கலின் சகோதரர் முகமது குஞ்சு அவரை நேரில் சந்தித்து தங்களது வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக குஞ்சு தனது சகோதரர் எங்கிருக்கிறார் என்பதை பற்றி விசாரிக்க அபுதாபிக்கு சென்றார். ஆனால் தனது சகோதரர் குறித்து எதுவும் தெரியவில்லை. தற்போது 45 வருடங்கள் கழித்து மீண்டும் துங்கல் தனது குடும்பத்துடன் இணைய போவதை நினைத்து அவரது குடும்பம் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளது.
துங்கலுக்கு நடைபெற்ற இச்சம்பவம், பரத் – பசுபதி நடிப்பில் வெளிவந்த ‘வெயில்’ படத்தில் வரும் காட்சிகளை கண்முன் நிறுத்துவதாக அமைந்துள்ளது. வெயில் படத்தில் அண்ணனான பசுபதி ஒரு சில விஷயங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறி வேறு ஊருக்கு சென்று அங்கு தோல்வியுற்ற நபராக மாறியதால் வீட்டுக்கு வருவதை தவிர்த்துவிடுவார்.