மகாராஷ்டிரத்தில் முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு புறநகர் ரயில்களில் விரைவில் அனுமதி
மகாராஷ்டிரத்தில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் எந்த கட்டுப்பாடுமின்றி புறநகர் ரயில்களில் அனுமதிக்கப்படும் நடைமுறை இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் அமல்படுத்தப்படலாம் என மாநில ஜவுளித்துறை அமைச்சர் அஸ்லம் ஷேக் தெரிவித்தார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
மும்பை புறநகர் ரயில் மற்றும் உள்ளூர் பேருந்துகளில் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அனுமதி குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒருவருக்கு எந்த கட்டுப்பாடுகளுமின்றி உள்ளூர் அளவில் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்பதே அமைச்சராக என்னுடைய கருத்து. இதுபற்றி முதல்வரிடமும் தெரிவித்தோம். இதுகுறித்த அறிக்கையையும் முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளோம். இரண்டு அல்லது மூன்று தினங்களில் இதுகுறித்து முடிவெடுப்பதாக தெரிவித்தார்.
மேலும் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் உணவகங்கள் செயல்படும் நேரம் அதிகரிக்கப்பட வேண்டும். இதுகுறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
மும்பையின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் புறநகர்(உள்ளூர்) ரயில் சேவைகள் தற்போது அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்காக மட்டுமே செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்காக புறநகர் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.