142 கோடி ரூபா பெறுமதியான குதிரையுடன், களமிறங்கும் இலங்கைப் பெண்.
இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் நம்பிக்கைக்குரிய போட்டியாளராக மாறியுள்ள, மெடில்டா கார்ல்ஸன், குதிரையேற்ற போட்டியில் தகுதிகாண் முதல் சுற்றில் நாளை போட்டியிடவுள்ளார்.
இந்தப்போட்டி இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
போட்டி தொடர்பில் மெடில்டா கால்ஸன் கூறுகையில், 6 மில்லியன் யூரோ (சுமார் 142 கோடி இலங்கை ரூபா) பெறுமதியான குதிரையுடன் தான் களமிறங்குவது வெறும் கையுடன் செல்வதற்கு அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது ஜேர்மனியில் வாழ்ந்துவருகின்ற மெட்டில்டா, இலங்கை சார்பாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுகின்ற முதலாவது குதிரையேற்ற வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
பல குதிரையேற்ற போட்டிகளில் பங்குபற்றிய அனுபவத்தைக் கொண்ட 37 வயதான இவர், கடந்த 2019இல் மாத்திரம் மெக்ஸிகோ சிட்டி, மியாமி, பாரிஸ், ரோம், மொனாக்கோ, லண்டன், தோஹா மற்றும் ப்ரேக் ஆகிய நகரங்களில் நடைபெற்ற குதிரையேற்ற போட்டிகளில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இதுவரை 16 குதிரையேற்ற போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டுள்ள மெட்டில்டா கார்ல்சன், உலகின் முன்னணி குதிரையேற்ற வீரர்கள் பங்குபற்றும் க்ளோபல் சம்பியன்ஸ் லீக் தொடரில் தொடர்ந்தும் பங்கேற்று வருகின்றார்.
1984 செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி கண்டியில் பிறந்து 3 மாத கைக்குழந்தையாக இருந்தபோது சுவீடன் நாட்டைச் சேர்ந்த தம்பதியினரால் மெட்டில்டா கார்ல்சன் தத்தெடுக்கப்பட்டார்.
சுவீடனில் குதிரையேற்ற போட்டிகள் பிரபல்யம் என்பதால் 8 வயது முதல் முறையாக ரய்டார்சோல்ஸ் கெப் என்ற விளையாட்டுக் கழகத்தில் இணைந்து பயிற்சிகளை எடுத்துக் கொண்டதுடன், தனது 18 ஆவது வயதில் முதல் முறையாக குதிரையேற்ற போட்டியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடதக்கது.
இம்முறை இலங்கையை பெருமையடைய செய்வதற்காக கலமிறங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.