கொரோனா நெகடிவ் சான்றிதழ் இன்று முதல் கட்டாயம்… தமிழக எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு
தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று பரவல், மீண்டும் சற்றே அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், தொற்று பரவலை தடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதனிடையே, அண்டை மாநிலமான கேரளாவில், தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது.
இதன் காரணமாக, அங்கிருந்து கோவை மற்றும் தேனி மாவட்டங்களுக்கு வருவோருக்கு, கொரோனா பரிசோதனை சான்றிதழ் ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கேரளாவில் இருந்து வருவோருக்கு, கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்பது, தமிழகம் முழுவதும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி, கேரளாவை ஒட்டியுள்ள தென்காசி,திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட, மாவட்ட எல்லைகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், அதற்கான சான்றிதழுடன், கேரளாவில் இருந்து தமிழகம் வரலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. உரிய சான்றிதழ் இல்லாமல் வருவோருக்கு, தமிழக எல்லையிலேயே கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.