தடுப்பூசி பெற செல்ல வசதியற்றவர்களுக்கு இலவச பயணச் சேவைகள்.
தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு போக்குவரத்து வசதியற்ற மக்களுக்காக –
50000 இலவச பயணச் சேவைகளை பெற்றுக் கொடுக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இன்று முன்வைத்த கோரிக்கைக்கு –
இலங்கை செஞ்சிலுவை சங்கம் (SLRCS) மற்றும் ஊபர் ஸ்ரீலங்கா (UBER SRI LANKA) நிறுவனம் ஆகியன உடன்பாடு தெரிவித்துள்ளன.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில்,
கொவிட் சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்காக,
இதுவரை செயற்படுத்தப்பட்டுள்ள இலவச போக்குவரத்து சேவை திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அறிவிக்கும் கூட்டம் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போதே இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் திரு.ஜகத் அபேசிங்க அவர்களின் தலைமையில் ஊபர் ஸ்ரீலங்கா மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதிகள் இதன்போது குறித்த திட்டம் தொடர்பில் கௌரவ பிரதமருக்கு விளக்கமளித்தனர்.
கொவிட் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு இரவு பகல் பாராது சேவை செய்யும் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் ஆகியோரது சேவையை பாராட்டிய கௌரவ பிரதமர்,
இலங்கை செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஊபர் ஸ்ரீலங்கா நிறுவனம் ஆகியவற்றின் இந்த இலவச போக்குவரத்து சேவையை – அவர்களது சேவைக்கான மரியாதையாக கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
மக்களின் உயிரை காப்பதற்கு தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டத்தை பலப்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டிய கௌரவ பிரதமர்,
தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்கு வருகைத்தருவதற்கு போக்குவரத்து வசதிகளின்றி சிரமப்படும் மக்களுக்கு இலவச போக்குவரத்து சேவையை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
மேற்படி கூட்டத்தில் – இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் திரு.ஜகத் அபேசிங்க, ஊபர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் செயலாக்க முகாமையாளர் திரு.எஸ்.லியனகே உள்ளிட்ட பிரதிநிதிகள் பலர் கலந்துக் கொண்டனர்.