தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக இ-பட்ஜெட்
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதலாவது நிதி நிலை அறிக்கை வரும் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு மறுநாள் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டும் இ- பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. இ- பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை செயலகம் முழுவீச்சில் தயாராகி வருகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் மேஜை முன்பாக கணினி வைக்கும் பணி முடிவடைந்துள்ளது. இந்த கூட்டத் தொடரில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி நிலை அறிக்கை வாசிக்கும் போது, அதை ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் கணினி மூலம் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. காகிதமில்லாத பேரவை அமையப் பெற்றாலும், நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த 5 நிமிடத்திற்கு பிறகு புத்தகங்களும் வழங்கப்படும் என சட்டப்பேரவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிதிநிலை அறிக்கை தாக்கல், துறைவாரியான மானியக் கோரிக்கைகளின் போது புத்தகமாக அச்சிடப்பட்டு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த நிலையில், இதை தவிர்க்க தற்போது பரிசோதனை அடிப்படையில் பேரவையில் இ-பட்ஜெட் அறிமுகம் செய்யப்படுகிறது. படிப்படியாக சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தையும் காகிதமில்லா சட்டப்பேரவை நிகழ்வாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இ-பட்ஜெட்டை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டு, நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அவர்களுக்கு பயிற்சியளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில முதன் முறையாக இ-பட்ஜெட் மட்டுமின்றி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதும் முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.