ஜோசப் ஸ்டாலினுக்கு ஏதேனும் நடந்தால் அரசே முழுப்பொறுப்பு! கூட்டமைப்பு தெரிவிப்பு.
“ஆசிரியர் சமூகத்தின் போராட்டம் நியாயமானது. அதற்கு அரசு நியாயமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயாளர் ஜோசப் ஸ்டாலினை இந்த அரசு துரத்திக்கொண்டு திரிகின்றது. அவருக்கு ஏதேனும் ஒன்று நடந்தால் அதற்கு அரசே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் நேற்று உரையாற்றும்போது தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்த நெருக்கடியைக் கையாள சுபோதினி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஊடாக ஆசிரியர் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்க்கும் முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆணைக்குழுவின் அறிக்கையையும் கல்வி அமைச்சே உருவாக்கியிருந்தது.
ஆகவே, சுபோதினி ஆணைக்குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றே ஆசிரியர் சங்கங்கள் கேட்கின்றன.
இந்த நாட்டின் முன்பள்ளி ஆசிரியர்களை சிவில் பாதுகாப்புப் பிரிவின் கீழ் வைத்துள்ளனர். இராணுவத்தின் கீழ் முன்பள்ளிகளை வைத்துள்ள மிக விசித்திரமான நாடு இலங்கையே. இதுதான் ஆசியாவின் ஆச்சரியம்” என்றார்.