அரசு உத்தரவை மீறி ஆடி அமாவாசைக்கு திதி கொடுக்க திருவள்ளூரில் குவிந்த பக்தர்கள் – காற்றில் பறந்த தமிழக அரசின் உத்தரவு
ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்குதிதி கொடுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திருவள்ளூரில் குவிந்ததால் நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோவிலில்,ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு நடைபெறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பாணை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களால் வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவையும் மீறி ஏராளமான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இரவில் குவிந்து, முன்னோருக்கு தர்ப்பணம் அளித்தனர்.
கோவில் வளாகத்தில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மழையையும் பொருட்படுத்தாமல் பேருந்து நிலையம் வணிக வளாகங்கள் மார்க்கெட் பகுதி வடக்கு ராஜவீதி தேரடி வீதி உள்ளிட்ட கோவிலைச் சுற்றி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குடும்பத்தினருடன் ஆட்டோ வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்தனர். இதனால் திருவள்ளுவர் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
பொதுமக்கள் யாரும் வைத்திய வீரராகவர் கோவிலுக்கு ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி கொடுக்க வர வேண்டாம் என்ற எச்சரிக்கையையும் மீறி வந்தவர்களை தடுக்க திருவள்ளூர் நகர காவல் துறையினர் தவறியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தற்போது, கொரோனா தொற்று காரணமாக, தமிழக அரசின்பரிந்துரைப்படி, வீர ராகவ ஸ்வாமி தேவஸ்தானம் சார்பாக எட்டாம் தேதி இரவு வரை சேவார்த்திகள் தரிசனம் கிடையாது’ என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பையும் பொருட்படுத்தாமல் சென்னை காஞ்சிபுரம் ராணிப்பேட்டை வேலூர் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் ஆடி அமாவாசையன்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர குவிந்தனர். மேலும் அண்டை மாநிலமான ஆந்திரா தெலுங்கானாவில் இருந்தும் திரளானோர் வைத்திய வீரராகவர் கோவில் தரிசனம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்ட நிலையிலும் கோவிலை ஒட்டி உள்ள கடைவீதி தெப்பக்குளம் மார்க்கெட் பகுதி கடைவீதிகளில் படுத்துறங்கி தர்ப்பணம் தந்தனர்.
முன்னோர்களுக்கு திதி கொடுத்தபோது முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மூன்றாம் அலை குறித்த தமிழக அரசின் உத்தரவையும் மதிக்காமல் ஏராளமானோர் குவிந்ததால் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.