பார்சிலோனா அணியில் இருந்து கண்ணீர் மல்க விடைபெற்றார் மெஸ்சி (Video)
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினாவை சேர்ந்த அவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக 2000ம் ஆண்டில் இருந்து விளையாடி வந்தார்.
சமீபத்தில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோபா அமெரிக்க கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியது. லியோனல் மெஸ்சி பார்சிலோனா அணிக்காக இதுவரை 672 கோல்கள் அடித்து உள்ளார். தனிப்பட்ட கிளப் அணிக்காக பீலே அடித்த 643 கோல் என்ற சாதனையை முறியடித்து மெஸ்சி புதிய சாதனை படைத்தார். 34 வயது நிரம்பிய மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக 34 டிராபிகளையும் பெற்றுத் தந்துள்ளார். 6 முறை பலோன் டி ஓர் விருதை வென்றுள்ளார்.
மெஸ்சியின் ஒப்பந்த காலம் முடிந்த நிலையில், அடுத்த சில வருடங்களுக்கு மெஸ்சியை தக்க வைத்துக்கொள்ள பார்சிலோனா கிளப் தயாராக இருந்தது. இதற்கான ஒப்பந்தமும் தயாராகின. ஆனால் நிதி மற்றும் கட்டமைப்பு தடைகள் காரணமாக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இதனால் பார்சிலோனா அணிக்கான மெஸ்சியின் பயணம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், மெஸ்சி இன்று பார்சிலோனா கிளப்புக்கு சொந்தமான கேம் நவ் ஸ்டேடியத்தில் செய்தியாளர்களை சந்தித்தித்தார். அப்போது, பார்சிலோனா அணியில் இருந்து விலகுவதை உறுதி செய்தார். அணியில் இருந்து விலகுவதாக அவர் கூறியபோது கண்களில் கண்ணீர் பெருகியது.
மெஸ்சியை வழியனுப்புவதற்காக ஸ்டேடியத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அவர்களில் பலர் மெஸ்சியின் ராசியான 10ம் எண் பொறிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்திருந்தனர்.