அத்தியாவசிய தேவை தவிர்த்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.
அத்தியாவசிய தேவை தவிர்த்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இன்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடாத்திய சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.நாட்டில் தற்போது கொரோனா நோய் பரவலானது அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. குறிப்பாக மேல் மாகாணத்தை பொறுத்த வரை இறப்புகள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.
அதிலும் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கடந்த சில வாரங்களாக நோய் அறிகுறிகளுடன் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றார்கள்.
இது ஒரு ஆபத்தான விடயம் எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவை தவிர்ந்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். சுகாதார அமைச்சு, சுகாதாரத் திணைக்களம் என்பன ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளன.
வடக்கு மாகாணத்தில் உள்ள ஒன்பது கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களும் நிரம்பிக் காணப்படுகின்றன. அத்தோடு கொரோனா நோயாளர்களை பராமரிக்க ஏற்படுத்தப்பட்ட வைத்தியசாலை விடுதிகளும் நிரம்பிக் காணப்படுகின்றன.
எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை ஒன்று கூடல்கள் அதாவது இந்து ஆலயங்களில் நடாத்தப்பட்ட நிகழ்வுகளின் காரணமாக பல தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
எனவே எதிர்வரும் காலத்தில் இவ்வாறான ஒன்றுகூடல்கள் மற்றும் நிகழ்வுகளை தவிர்த்து பொதுமக்கள் வீடுகளில் இருத்தல் சிறந்தது. அதேபோல மேல் மாகாணத்தில் தற்போது இறப்பு வீதம் அதிகரித்துள்ளது. அதே நிலைமை எமது வடக்கு மாகாணத்திலும் இனி வருங்காலத்தில் ஏற்படலாம்.
எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுதல் மிகவும் அவசியமாகும். அத்தோடு மேல் மாகாணத்தில் வீடுகளில் கொரோனா நோயாளர்களை வைத்து பராமரிக்கும் செயற்திட்டம் பரீட்சார்த்தமாக செயல்படுத்தப்படுகின்றது. அந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால் ஏனைய மாகாணங்களுக்கும் அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.