வெளிநாட்டை சேர்ந்தவர்களும் செலுத்திக்கொள்ள அனுமதி!
இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்களும் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துகொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் மெல்ல அதிகரித்து வருகிறது. 3வது அலை தாக்கக் கூடும் என்ற கருத்து நிலவிவரும் நிலையில், அனைத்து மக்களுக்கும் தடுப்பூசியை செலுத்தும் முனைப்பில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்துவது தொடங்கியது. இதுவரை 50 கோடிக்கு மேல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தற்போது, இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குமட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை விரைவில் தொடங்கவும் அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் தங்கியுள்ள பிற நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக அவர்கள் கோவின் தளத்தில் பதிவு செய்யவேண்டும். தங்களின் பாஸ்போர்ட்டை அடையாள ஆதாரமாக காண்பித்து பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தியாவில் குறிப்பிட்ட எண்ணிக்கை வெளிநாட்டு நபர்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக மெட்ரோபொலிட்டன் நகர்களின் அதிகம் வசிக்கின்றனர். இந்த பகுதிகளில் மக்கள் தொகை அடர்த்திக் காரணமாக கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனை எதிர்கொள்ள, அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது முக்கியமாகப்படுகிறது” என்று கூறியுள்ள மத்திய சுகாதாரத் துறை அரசின் இந்த நடவடிக்கை இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டவரின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளது.