கூட்டுறவு வங்கியில் நகைகடன் தள்ளுபடி.. வதந்தியால் வங்கியில் குவிந்த பொதுமக்கள்
கமுதி கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி வதந்தியால் வங்கிகள் முன் முககவசம் சமூக இடைவெளி இன்றி விவசாயிகள் குவிந்ததால் பரபரப்பு.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மத்திய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 5 பவுன் நகைகளுக்கு குறைவாக அடகு வைத்துள்ள விவசாயிகளின் நகைகள் தள்ளுபடி செய்யப்படுவதாக வதந்தி பரவியது. இதனை உண்மை என நம்பிய கமுதி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் ராமநாதபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட தொடக்க வேளாண்மை வங்கிகளின் முன்பாக குவிந்தனர்.
தாங்கள் விவசாய கடன் மூலமாக நகை அடகு வைத்துள்ள நகை கடன் அட்டை ,ஆதார் கார்டு, வங்கி புத்தகம் உள்ளிட்டவற்றுடன் குவிந்தனர். விவசாயிகள் ஆவணங்களுடன் அதிகாலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து அளவுக்கு அதிகமாக வங்கியின் முன்பாக சமூக இடைவெளியை மறந்து முகக் கவசங்கள் அணியாமல் ஒரே நேரத்தில் குவிந்து வருவதால் கொரோனா தொற்று ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது
பொதுமக்கள் அதிகளவில் குவிந்ததால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன்பின்னர் வங்கி ஊழியர்கள் விவசாயிகளிடம் நகைகடன் தள்ளுபடி தொடர்பாக யாரோ வதந்தி பரப்பியுள்ளதாக விளக்கினர். நகைக்கடன் ரத்தாகும் என மகிழ்ச்சியுடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.