TN Budget 2021 : பட்ஜெட்டில் திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?

தமிழ்நாடு அரசின் 2021-22ஆம் நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், சாமானிய மக்கள் முதல் தொழில்துறையினர் வரையிலான பட்ஜெட் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.

திமுக அரசு பதவியேற்று வரும் 14ஆம் தேதியுடன், 100 நாட்கள் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உட்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், சிறு, குறு தொழிலாளர்களுக்கு கடனுதவி வழங்குவது குறித்தும், மானிய விலையில் மின்சாரம் வழங்குவது தொடர்பான அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் என்று தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் அளிக்கப்படும் உதவித் தொகை ஆயிரம் ரூபாயை, திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப்போல ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படுமா என்பதே மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்ட போதிலும் சொத்து வரி தொடர்ந்து வசூலிப்பதாக கூறும் தனியார் பள்ளி நிர்வாகத்தினர், அதில் விலக்கு அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்திற்கு தனி ஏற்றுமதி கொள்கையை உருவாக்கினால் திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதியும், வேலைவாய்ப்பும் பன்மடங்கு அதிகரிக்கும் என்று ஜவுளி துறையினர் யோசனை தெரிவிக்கின்றனர்.

புயல் எச்சரிக்கை காலங்களில் இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும், டீசலுக்கு முழு மானியம் வழங்குவது தொடர்பான அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறுமா என்று மீனவர்கள் காத்திருக்கின்றனர்.

தமிழ்நாடு அரசின் நிதி நிலையை மேம்படுத்த வரியை உயர்த்த வேண்டியது அவசியம் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கும் நிலையில், கொரோனா காலத்தில் முடங்கியுள்ள அனைத்து துறைகளையும் மீட்டெடுக்க வேண்டிய நெருக்கடியும் புதிதாக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முன் உள்ளது.

இதனால், இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.